தமிழ்நாடு

மேட்டூர் அனல் மின் நிலையத்தில் 2-வது நாளாக வருமான வரித்துறை சோதனை

Published On 2023-09-21 08:18 GMT   |   Update On 2023-09-21 08:18 GMT
  • மேட்டூர் அனல் மின்நிலையத்தில் 840 மற்றும் 600 மெகாவாட் மின் உற்பத்தி செய்யும் 2 யூனிட்கள் செயல்பட்டு வருகிறது.
  • வருமான வரித்துறையினரின் இந்த 13 மணி நேர சோதனையில் பல்வேறு முக்கிய ஆவணங்களை அதிகாரிகள் கைப்பற்றியதாக தெரிகிற

மேட்டூர்:

சேலம் மாவட்டம் மேட்டூர் அனல் மின்நிலையத்தில் 840 மற்றும் 600 மெகாவாட் மின் உற்பத்தி செய்யும் 2 யூனிட்கள் செயல்பட்டு வருகிறது.

இந்த 2 அனல் மின் நிலையங்களிலும் சென்னையை தலைமையிடமாக கொண்டு இயங்கும் தனியார் என்ஜினீயரிங் நிறுவனம் நிலக்கரி கையாளும் பிரிவு, முதன்மை அரவை மற்றும் 2-ம் நிலை அரவை, கொதிகலன் குழாய் பராமரிப்பு உள்ளிட்ட பல்வேறு ஒப்பந்த பணிகளை எடுத்துள்ளது.

இந்நிறுவனம் சார்பில் 800 பேர் ஒப்பந்த தொழிலாளர்களாக அனல்மின் நிலையத்தில் பணியாற்றி வருகின்றனர். மேலும் தமிழ்நாடு மின்சார துறையில் பல்வேறு ஒப்பந்தங்களையும் இந்நிறுவனம் மேற்கொண்டு வருகிறது.

இந்த நிலையில் தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு சப்ளை செய்த பொருட்களில் இந்நிறுவனம் முறைகேடுகள் செய்து வரி ஏய்ப்பு செய்துள்ளதாக புகார்கள் எழுந்தது. இதன் காரணமாக அந்த நிறுவனத்துக்கு சொந்தமான 40-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று காலை முதல் சோதனையில் ஈடுபட்டனர்.

இதன் அடிப்படையில் மேட்டூர் அனல்மின் நிலைய பணிகளுக்கான பொருட்கள் வாங்கியதில் முறைகேடுகள் நடந்து உள்ளதா? வரி ஏய்ப்பு செய்யப்பட்டு உள்ளதா? என்பதை ஆய்வு செய்ய மேட்டூர் அனல்மின் நிலையத்தில் செயல்பட்டு வரும் இந்த தனியார் நிறுவனத்தில் நேற்று காலை 7 மணிக்கு வருமானவரித் துறையை சேர்ந்த 5 அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

இதில் அலுவலகத்தில் இருந்த கோப்புகள், கணினியில் பதிவாகி இருந்த தகவல்களை சோதனை செய்தனர். மேலும் அங்கு பணியாற்றிய ஊழியர்களிடமும் அதிகாரிகள் துருவி துருவி விசாரணை நடத்தினர். இந்த சோதனை இரவு 8 மணி வரை நீடித்தது.

வருமான வரித்துறையினரின் இந்த 13 மணி நேர சோதனையில் பல்வேறு முக்கிய ஆவணங்களை அதிகாரிகள் கைப்பற்றியதாக தெரிகிறது. ஆனால் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் குறித்து எந்தத் தகவல்களையும் அதிகாரிகள் தெரிவிக்கவில்லை.

இந்த நிலையில் இன்று 2-வது நாளாக மேட்டூர் அனல்மின் நிலையத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News