தமிழ்நாடு

தி.மு.க.வினரின் எதிர்ப்பால் கரூரில் ஐ.டி. ரெய்டு நிறுத்தம்: எஸ்.பி. அலுவலகத்தில் தஞ்சம் அடைந்த அதிகாரிகள்

Published On 2023-05-26 06:22 GMT   |   Update On 2023-05-26 06:22 GMT
  • கரூர் ராமகிருஷ்ணாபுரம் பகுதியில் சோதனை நடத்திய அதிகாரிகளின் கார் கண்ணாடிகள் உடைக்கப்பட்டன.
  • சோதனையில் ஈடுபட்ட அதிகாரிகளை திமுக தொண்டர்கள் முற்றுகையிட்டு எதிர்ப்பு தெரிவித்தனர்.

கரூர்:

தமிழக மதுவிலக்கு ஆயத்தீர்வுத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, அவருக்கு நெருக்கமானவர்கள், நண்பர்கள், உறவினர்கள் வீடு மற்றும் அலுவலகங்கள் என 40-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் இன்று காலை முதல் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். சென்னை, கோவை, கரூர் மற்றும் கேரள மாநிலம் பாலக்காடு, கர்நாடக மாநிலம் பெங்களூரு மற்றும் ஆந்திர மாநிலம் ஐதராபாத் பகுதிகளில் இந்த சோதனையானது நடக்கிறது. டாஸ்மாக் மற்றும் மின்துறை ஒப்பந்ததாரர்கள் வீடுகளிலும் சோதனை நடைபெறுகிறது.

இந்நிலையில் கரூரை அடுத்த ராமகிருஷ்ணாபுரம் பகுதியில் சோதனை நடத்திய அதிகாரிகளின் கார் கண்ணாடிகள் உடைக்கப்பட்டதால், அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சோதனையில் ஈடுபட்ட அதிகாரிகளை திமுக தொண்டர்கள் முற்றுகையிட்டனர். அதிகாரிகளை சோதனை செய்ய விடாமல் தடுத்தனர். இதனால் பாதுகாப்பு காரணங்களுக்காக வருமான வரித்துறை அதிகாரிகள் கரூர் காவல் நிலையத்துக்கு அழைத்து செல்லப்பட்டனர்.

இதேபோல் மற்ற இடங்களிலும் அதிகாரிகளை திமுகவினர் முற்றுகையிட்டு பணியை செய்யவிடாமல் தடுத்தனர். இதனால் கரூரில் பல்வேறு இடங்களில் நடைபெற்ற வருமான வரி சோதனை நிறுத்தப்பட்டது. 8 வாகனங்களில் வந்திருந்த அதிகாரிகள் கரூர் எஸ்.பி. அலுவலகத்தில் தஞ்சம் அடைந்தனர்.

இனி அடுத்தகட்ட நடவடிக்கை தொடர்பாக வருமான வரித்துறை அதிகாரிகள், உயர் அதிகாரிகளிடம் கலந்துபேசி முடிவு செய்வார்கள்.

Tags:    

Similar News