தமிழ்நாடு

விழுப்புரத்தில் 2வது நாளாக சோதனை- எம்.ஜி.எம். குழும மது ஆலையில் முக்கிய ஆவணங்கள் சிக்கியது

Published On 2022-06-16 04:01 GMT   |   Update On 2022-06-16 04:01 GMT
  • விழுப்புரம் புதிய பஸ் நிலையம் அருகே எல்லீஸ் சத்திரம் சாலையில் எம்.ஜி.எம். நிறுவனத்துக்கு சொந்தமான மதுபான ஆலை உள்ளது.
  • வயல்வெளிகளில் வீசப்பட்டிருந்த எம்.ஜி.எம். குழும நிறுவனத்துக்கு சொந்தமான முக்கிய ஆவணங்களை அதிகாரிகள் கைப்பற்றினர்.

விழுப்புரம்:

வருமானத்தை குறைத்து கணக்கு காட்டியதாக தமிழகம் முழுவதும் எம்.ஜி.எம். நிறுவனத்துக்கு சொந்தமான 40 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று காலை சோதனை நடத்தினர்.

விழுப்புரம் புதிய பஸ் நிலையம் அருகே எல்லீஸ் சத்திரம் சாலையில் எம்.ஜி.எம். நிறுவனத்துக்கு சொந்தமான மதுபான ஆலை உள்ளது. இங்கு நாள் ஒன்றுக்கு 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மதுபாட்டில்கள் தயாரிக்கப்பட்டு விற்பனைக்கு அனுப்பப்பட்டு வருகிறது. இங்கு 100-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் வேலை பார்த்து வருகிறார்கள்.

நேற்று நடந்த சோதனையின்போது பணியாளர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. இந்த நிறுவனத்தில் உள்ள அனைத்து ஆவணங்களும் அங்குலம் அங்குலமாக சோதனை நடத்தப்பட்டது. அப்போது ஒருசில முக்கிய ஆவணங்கள் சிக்கியது.

இந்த நிறுவனத்துக்கு சாமியடி குச்சிப்பாளையம் பகுதியில் இருந்து மூலப்பொருட்கள் கொண்டு வரப்படுகிறது. அங்கும் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தினார்கள். இந்த சோதனை விடிய விடிய நடத்தப்பட்டது.

இன்று 2-வது நாளாகவும் வருமான வரித்துறை அதிகாரிகள் விழுப்புரத்தில் உள்ள எம்.ஜி.எம். குழும நிறுவனத்தில் அதிரடி சோதனை நடத்தினர்.

சோதனையின்போது யாரும் அனுமதிக்கப்படவில்லை. அப்போது நடந்த விசாரணையில் விழுப்புரத்தில் இருந்து 10 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள பஞ்சமாதேவி என்ற இடத்தில் உள்ள வயல்வெளியில் ஆவணங்கள் வீசப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்தது.

அதனைத்தொடர்ந்து வருமான வரித்துறை அதிகாரிகள் 3 கார்களில் சென்றனர். வயல்வெளிகளில் வீசப்பட்டிருந்த எம்.ஜி.எம். குழும நிறுவனத்துக்கு சொந்தமான முக்கிய ஆவணங்களை கைப்பற்றினர். ஆவணங்களின் முழு விபரங்களை தெரிவிக்க வருமான வரித்துறையினர் மறுத்துவிட்டனர்.

இந்த ஆவணங்களை வீசி சென்றது யார்? எதற்காக வீசினர்? என்பது குறித்து வருமான வரித்துறையினர் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News