தமிழ்நாடு

நெல்லை கோர்ட்டில் ஐ.பி.எஸ். அதிகாரி பல்வீர்சிங் 4-வது முறையாக ஆஜர்

Published On 2024-02-14 07:20 GMT   |   Update On 2024-02-14 07:20 GMT
  • போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜகுமாரி மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் முருகேசன் தவிர மற்ற 12 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர் ஆகினர்.
  • உத்தரவு நகலை வழங்குமாறு அறிவுறுத்திய நீதிபதி, வழக்கு விசாரணையை அடுத்த மாதம் 28-ந்தேதிக்கு ஒத்திவைத்தார்.

நெல்லை:

நெல்லை மாவட்டம் அம்பை போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் போலீஸ் விசாரணைக்கு அழைத்து வரப்பட்டவர்களின் பற்களை பிடுங்கிய விவகாரத்தில் அங்கு உதவி போலீஸ் சூப்பிரண்டாக இருந்த பல்வீர் சிங் உட்பட 14 பேர் மீது சி.பி.சி.ஐ.டி. போலீசார் 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர்.

தொடர்ந்து, கடந்த டிசம்பர் மாதம் 15-ந்தேதி அவர்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு நெல்லை நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.

இதுவரை 3 கட்டங்களாக விசாரணை நடைபெற்ற நிலையில் அவற்றில் ஐ.பி.எஸ். அதிகாரி பல்வீர்சிங் ஆஜரானார். தொடர்ந்து 4-வது முறையாக இந்த வழக்கு இன்று நடுவர் நீதிமன்றம் எண் 1-ல் நீதிபதி திரிவேணி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது ஐ.பி.எஸ். அதிகாரி பல்வீர்சிங் நேரில் ஆஜரானார். மேலும் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜகுமாரி மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் முருகேசன் தவிர மற்ற 12 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர் ஆகினர்.

அப்போது எதிர்தரப்பு வக்கீல் மகாராஜன் தாங்கள் இந்த வழக்கிற்காக ஆஜராக வேண்டும் என நீதிபதியிடம் கேட்டுக்கொண்டார். அதற்கு பல்வீர் சிங் தரப்பு வக்கீல் துரைராஜ், இந்த வழக்கை அரசு வக்கீல் தான் நடத்திக் கொண்டிருக்கிறார். அப்படி அவருக்கு உதவி புரிவதற்காக வக்கீல்கள் நியமிக்கப்பட்டால் அதற்கான உத்தரவு நகலை தங்களுக்கு வழங்குமாறும் கேட்டுக் கொண்டார்.

இதையடுத்து உத்தரவு நகலை வழங்குமாறு அறிவுறுத்திய நீதிபதி, வழக்கு விசாரணையை அடுத்த மாதம் 28-ந்தேதிக்கு ஒத்திவைத்தார். மேலும் அன்று மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜராகும்படி உத்தரவிட்டார்.

Tags:    

Similar News