தமிழ்நாடு

மாமல்லபுரத்தில் ஆடியோ டூர் பார்கோடு அறிமுகம்- சுற்றுலா பயணிகள் வரவேற்பு

Published On 2023-01-23 07:14 GMT   |   Update On 2023-01-23 07:14 GMT
  • பார்கோடை ஸ்கேன் செய்தால் சுற்றுலா இடங்களின் வரலாறு, செல்லும் தூரம், உள்ளிட்ட விபரங்கள் டிஜிட்டல் ஆடியோவில் வரும்.
  • புதிய பார்கோடு முயற்சிக்கு சுற்றுலா பயணிகள் வரவேற்பு தெரிவித்து உள்ளனர்.

மாமல்லபுரம்:

மாமல்லபுரம் சிறந்த சுற்றுலா தலமாக உள்ளது. இங்குள்ள புராதன சின்னங்களை பார்வையிட தினந்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் முக்கிய சுற்றுலா இடத்தில் மாமல்லபுரம் இடம் பிடித்து வருகிறது.

இந்நிலையில் மாமல்லபுரம் வரும் வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு சுற்றுலா பயணிகள் தாங்கள் விரும்பிய இடத்திற்கு செல்லும் முன் அப்பகுதி விபரங்களை ஆடியோ வழியாக அறிந்து கொள்வதற்கு வசதியாக புதிதாக பார்கோடு ஏற்பாடு செய்யப் பட்டு உள்ளது. தொல்லியல்துறை மற்றும் சுற்றுலாத் துறையின் ஏற்பாட்டில் 'ஸ்டோரி டிரையல்ஸ் ஆடியோ டூர்' என்ற பெயரில் டிஜிட்டல் முறையில் புதிய பார்கோடு ஒன்றை உருவாக்கி ஐந்துரதம், கடற்கரை கோயில் பகுதியில் முதற்கட்டமாக அறிமுகம் செய்து ஒட்டி வைத்து உள்ளனர்.

சுற்றுலா பயணிகள் இந்த பார்கோடை தங்களது செல்போனில் ஸ்கேன் செய்தால் அருகில் உள்ள முக்கிய புராதன சின்னங்கள், சுற்றுலா தலங்கள், கோயில்கள், போன்ற இடங்களின் வரலாறு, செல்லும் தூரம், உள்ளிட்ட விபரங்கள் டிஜிட்டல் ஆடியோவில் வரும்.

இதனால் சுற்றுலா பயணிகள் வழிகாட்டிகள் உதவியின்றி புராதன சின்னங்கள் குறித்து அறிந்து கொள்ள முடியும். மேலும் சுற்றுலா தலம் குறித்து முழுவதும் அறிந்து கொண்டு வேகமாக தங்களது பயணத்தை முடிக்க முடியும்.

இந்த புதிய பார்கோடு முயற்சிக்கு சுற்றுலா பயணிகள் வரவேற்பு தெரிவித்து உள்ளனர். புராதன சின்னங்கள் குறித்து முழுமையாக சரியான தகவலை பெற முடிகிறது என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.

Tags:    

Similar News