தமிழ்நாடு

எலுமிச்சை தேவை அதிகரிப்பால் கிலோ ரூ.130 ஆக உயர்வு

Published On 2024-04-05 11:36 GMT   |   Update On 2024-04-05 11:36 GMT
  • கோயம்பேடு சந்தைக்கு தினசரி 10லாரிகள் வரை சுமார் 80 முதல் 100டன் எலுமிச்சை பழங்கள் விற்பனைக்கு வருவது வழக்கம்.
  • கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் எலுமிச்சை பழத்துக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

போரூர்:

கோயம்பேடு, காய்கறி மார்கெட்டுக்கு ஆந்திர மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து எலுமிச்சை பழம் விற்பனைக்கு வருகிறது. தற்போது கோடைவெயில் சுட்டெரித்து வரும் நிலையில் எலுமிச்சை பழம் தேவை அதிகரித்து உள்ளது.

கோயம்பேடு சந்தைக்கு தினசரி 10லாரிகள் வரை சுமார் 80 முதல் 100டன் எலுமிச்சை பழங்கள் விற்பனைக்கு வருவது வழக்கம். கோடை சீசன் தொடங்கி உள்ளதால் பல்வேறு மாநிலங்களுக்கு ஆந்திர மாநிலத்தில் இருந்து எலுமிச்சை பழங்கள் அதிகளவில் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. இதனால் கோயம்பேடு சந்தைக்கு வரும் எலுமிச்சை பழங்களின் வரத்து வெகுவாக குறைந்துவிட்டது.

கடந்த சில நாட்களாகவே 40 டன் எலுமிச்சை பழங்கள் மட்டுமே விற்பனைக்கு வருகிறது. கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் எலுமிச்சை பழத்துக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் அதன் விலையும் தொடர்ந்து ஏறு முகமாகவே இருந்து வருகிறது. மொத்த விற்பனையில் எலுமிச்சை பழம் கிலோ ரூ.100-க்கு விற்கப்படுகிறது. அதேபோல் சில்லரை விற்பனையில் ஒரு கிலோ எலுமிச்சை ரூ.130வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வெப்பத்தின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க கடைகளில் எலுமிச்சை பழச்சாறு, குளிர்பானங்கள், சர்பத்தை பலர் விரும்பி குடித்து வருகிறார்கள். இதனால் சாலையோரங்களிலும் எலுமிச்சை சர்பத் கடைகள் பல இடங்களில் முளைத்து உள்ளன.

Tags:    

Similar News