டெங்கு காய்ச்சல் உறுதியானால் உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும்- மருத்துவமனைகளுக்கு உத்தரவு
- டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த சுகாதாரத்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
- மழைப்பொழிவு காரணமாக தமிழகத்தில் காய்ச்சல் பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ள நிலையில் அறிவுறுத்தல்.
தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு பரவி வருகிறது. இதனால், டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த சுகாதாரத்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
மேலும், டெங்கு பரவலுக்கு முக்கிய காரணமான கொசுக்களை ஒழிக்கவும் சென்னை மாநகராட்சி சார்பில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்நிலையில், சிகிச்சையில் இருக்கும் நோயாளிகளுக்கு டெங்கு உறுதியானால் உடனடியாக சுகாதாரத் துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என அனைத்து அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள், பரிசோதனை மையங்களுக்கு பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வ விநாயகம் உத்தரவிட்டுள்ளார்.
மேலும், டெங்கு காய்ச்சல் உறுதியான பிறகும் துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கவில்லை என்றால் பொது சுகாதார சட்டம் 1936ன் படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் விவரங்களைத் தெரிவிக்காத மருத்துவர்களுக்கும் சட்ட விதிகளின்படி அபராதம் விதிக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மழைப்பொழிவு காரணமாக தமிழகத்தில் காய்ச்சல் பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ள நிலையில் அறிவுறுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.