தமிழ்நாடு செய்திகள்

விரைவில் நானும் தமிழில் சரளமாக பேசுவேன்- கவர்னர் ஆர்.என்.ரவி பேச்சு

Published On 2022-08-03 18:08 IST   |   Update On 2022-08-03 18:08:00 IST
  • ஓடாநிலையில் தீரன்சின்னமலை முழுஉருவச்சிலைக்கு கவர்னர் ஆர்.என்.ரவி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
  • தீரன்சின்னமலை வாரிசுதார்கள் மற்றும் ஓடாநிலை பகுதி மக்களுக்கு கவர்னர் சான்றிதழ் வழங்கினார்.

ஈரோடு:

ஈரோடு மாவட்டம் அறச்சலூர் அருகே உள்ள ஓடாநிலையில் தீரன் சின்னமலை ஆடிப்பெருக்கு விழா இன்று கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டார். தீரன்சின்னமலை மணிமண்டப வளாகத்தில் அமைக்கப்பட்டு உள்ள தீரன்சின்னமலை முழுஉருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இந்த நிகழ்ச்சியின் போது தமிழக பா.ஜனதா கட்சியின் மாநில தலைவர் கே.அண்ணாமலை, பேரூர் ஆதினம் சாந்தலிங்க மருதாச்சல அடிகளார், சிரவை ஆதினம் ராமானந்த குமரகுருபர சுவாமிகள், பழனி சாதுசுவாமிகள் திருமட மடாதிபதி சாது சண்முக அடிகளார் ஆகியோர் உடன் இருந்தனர்.

தீரன் சின்னமலை முழு உருவச்சிலைக்கு கவர்னர் ஆர்.என்.ரவி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். 

இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து ஓடாநிலை அருகே தீரன் சின்னமலை கூட்டமைப்பு சார்பில் நடந்த தீரன்சின்மலை 217-வது நினைவேந்தல் நிகழ்வில் கவர்னர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டார். பின்னர் தீரன்சின்னமலை வாரிசுதார்கள் மற்றும் ஓடாநிலை பகுதி மக்களுக்கு கவர்னர் சான்றிதழ் வழங்கினார்.

அப்போது கவர்னர் ஆர்.என்.ரவி பேசியதாவது:

நான் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். இந்தியாவின் சிறந்த சுதந்திர போராட்ட வீரர் தீரன்சின்னமலையின் நினைவு நாளில் பங்கேற்பது பெருமையாக உள்ளது. இந்திய சுதந்திரத்துக்காக தீரன் சின்னமலை தனது உயிரை தியாகம் செய்தவர். நமது நாட்டின் விடுதலைக்காக தனது வாழ்வை இழந்தவர்களையும், ரத்தம் சிந்தியவர்களையும் மறக்க கூடாது. நாட்டுக்காக தியாகம் செய்தவர்களை நாம் ஒருபோதும் மறக்க கூடாது. தீரன் சின்னமலைக்கு நாம் நன்றி செலுத்தும் வகையில் சிறந்த பாரதத்தை உருவாக்க வேண்டும்.

நண்பர்களே, தமிழ் மிகவும் பழமையான மொழி. மிகவும் அழகான மொழி. தமிழ் மக்களைப்போன்று நானும் தமிழ் பேச வேண்டும் என்பது எனது விருப்பமாக உள்ளது. விரைவில் நானும் உங்களைப்போன்று சரளமாக தமிழில் பேசுவேன் என்று உறுதியாக நம்புகிறேன். இவ்வாறு அவர் பேசினார்.

Tags:    

Similar News