தமிழ்நாடு செய்திகள்

ஐ.ஏ.எஸ். அதிகாரி மீதான கொலை மிரட்டல் புகாரை விசாரிக்க வேண்டும்- போலீசாருக்கு மதுரை ஐகோர்ட் உத்தரவு

Published On 2023-07-22 12:58 IST   |   Update On 2023-07-22 12:58:00 IST
  • வழக்கினை விசாரித்த ஐகோர்ட்டு, வனப்பகுதி நிலத்தினை மீட்க உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டது.
  • போலீசார் மூலமாக என் மீதும், எனது குடும்பத்தினர் மீதும் 11 பொய் வழக்குகள் பதிவு செய்தனர்.

மதுரை:

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானரை சேர்ந்தவர் கோகுல கிருஷ்ணன். இவர் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:-

எனது தந்தை சுதந்திரப் போராட்ட வீரர். நானும் கொடைக்கானல் பகுதிகளில் உள்ள மக்களுக்கு தொடர்ந்து சமூக சேவையாற்றி வருகிறேன்.

இந்த நிலையில் கொடைக்கானல் பூதலூர் பகுதியில் இருக்கக்கூடிய 1 ஏக்கர் 85 சென்ட் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியை அரசு அதிகாரிகள் துணையுடன் சிலர் போலியான ஆவணங்கள் தயாரித்து அபகரிக்க முயற்சி செய்தனர். இது தொடர்பாக மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தேன். இந்த வழக்கினை விசாரித்த ஐகோர்ட்டு, வனப்பகுதி நிலத்தினை மீட்க உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டது.

இந்த வழக்கில் ஐ.ஏ.எஸ். அதிகாரி உட்பட பல அதிகாரிகள் தொடர்பில் இருந்தனர். உயர் அதிகாரிகள் செய்த குற்றங்களை நான் சுட்டிக்காட்டியதால் அதிகாரிகள் அவர்களது அதிகாரத்தை பயன்படுத்தி போலீசார் மூலமாக என் மீதும், எனது குடும்பத்தினர் மீதும் 11 பொய் வழக்குகள் பதிவு செய்தனர். அது மட்டுமின்றி வழக்கில் தொடர்புடைய ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரி தொடர்ச்சியாக என்னை மிரட்டியும் வந்தார். கொலை மிரட்டல் குறித்த குறுந்தகவல்களையும் எனக்கு அனுப்பி வருகிறார்.

இது தொடர்பாக திண்டுக்கல் சைபர் கிரைம் போலீசாரிடம் உரிய ஆதாரங்களுடன் புகார் அளித்துள்ளேன்.

எனவே நான் கொடுத்த புகாரின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

இந்த மனு நீதிபதி நாகார்ஜுன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு வக்கீல் ஆஜராகி, மனுதாரர் புகாரின் அடிப்படையில் விசாரணை நடக்கிறது என தெரிவித்தார்.

இதை பதிவு செய்த நீதிபதி, மனுதாரர் தாண்டிக்குடி போலீஸ் இன்ஸ்பெக்டரிடம் புதிய புகார் மனுவை அளிக்க வேண்டும். அந்த மனு மீது உரிய விசாரணை நடத்தி, போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.

Tags:    

Similar News