தமிழ்நாடு செய்திகள்

மதுரையில் விடிய விடிய கொட்டித்தீர்த்த மழை: சாலை பள்ளங்களில் வெள்ள நீர் சூழ்ந்ததால் போக்குவரத்து பாதிப்பு

Published On 2023-11-07 15:19 IST   |   Update On 2023-11-07 15:19:00 IST
  • மதுரை நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று மாலை லேசான மழை பெய்தது.
  • மதுரையில் ஒருசில தனியார் பள்ளிகள் ஒன்று முதல் 5-ம் வகுப்பு வரை விடுமுறை அறிவித்தது.

மதுரை:

மதுரை மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக கடந்த சில நாட்களாக மிதமான மழை பெய்து வருகிறது. பகல் நேரங்களில் லேசான வெயில் அடித்த போதிலும், மாலையில் தொடங்கி இரவு முழுவதும் பெய்யும் கனமழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியுள்ளது.

அதேவேளையில் இந்த தொடர் மழையால் கண்மாய்கள், குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. விவசாய பணிகளையும் தொடங்க விவசாயிகள் மும்முரம் காட்டி வருகிறார்கள்.

இந்த நிலையில் மதுரை நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று மாலை லேசான மழை பெய்தது. இரவில் இடி-மின்னலுடன் கனமழை பெய்தது. நீண்ட நேரம் பெய்த மழை காரணமாக மதுரையின் பல்வேறு பகுதிகளில் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்தது. சாலைப் பள்ளங்களிலும் மழை நீர் தேங்கியதால் மதுரையில் முக்கிய சாலைகளில் கூட குளம் போல தண்ணீர் தேங்கியது.

இதனிடையே அதிகாலையிலும் மழை தொடர்ந்து பெய்தது. வானத்தில் கருமேகங்கள் சூழ்ந்து மழை பெய்ததால் முக்கிய சாலைகளில் வெள்ளம் தேங்கியுள்ளது. கோரிப்பாளையம், சிம்மக்கல், தல்லாகுளம், கூடல்நகர், ஆனையூர் உள்ளிட்ட பகுதிகளில் பெய்த மழை காரணமாக போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.

மதுரையில் இன்று காலை பெய்த மழை காரணமாக சாலைகளில் வெள்ளம் தேங்கியதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மழை காரணமாக கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை விடப்படுமா? என்ற எதிர்பார்ப்புடன் மாணவ, மாணவிகள் வீடுகளில் முடங்கினர்.

ஆனால் காலை 7.30 மணிவரை அறிவிப்பு வராததால் மாணவ-மாணவிகள் மழையில் நனைந்தபடி பள்ளிகளுக்கு புறப்பட்டு சென்றனர். இருசக்கர வாகனங்கள், ஆட்டோ மற்றும் பள்ளி வாகனங்களும் போவரத்து நெரிசலில் சிக்கியதால் பள்ளி மாணவ-மாணவிகள் காலதாமதத்துடன் பள்ளிகளுக்கு சென்றனர்.

இதற்கிடையே மதுரையில் ஒருசில தனியார் பள்ளிகள் ஒன்று முதல் 5-ம் வகுப்பு வரை விடுமுறை அறிவித்தது. இதனால் மாணவர்களின் பெற்றோர்கள் நிம்மதி அடைந்தனர்.

Tags:    

Similar News