தமிழ்நாடு

விடிய, விடிய பெய்த கனமழை: வீடுகளுக்குள் மழைநீர் புகுந்ததால் பொதுமக்கள் மறியல் போராட்டம்

Published On 2023-09-18 07:32 GMT   |   Update On 2023-09-18 07:32 GMT
  • மக்கள் மின் வசதி இல்லமலும், வீடுகளுக்குள் மழை நீர் சூழ்ந்ததாலும் இரவு முழுவதும் உறங்க முடியாமல் மிகுந்த அவதிக்குள்ளகினர்.
  • சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

மத்தூர்:

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த கொல்லப்பட்டி கிராமத்தில் இரவு முழுவதும் மழை பெய்ததால் வீடுகளுக்குள் மழை நீர் புகுந்தது.

இந்த கன மழையால் ஊத்தங்கரை அடுத்த கொல்லப்பட்டி கிராமத்தில் உள்ள சாலைகள் மழை நீரில் மூழ்கி வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது.

மேலும் இரவு முழுவதும் இடி மின்னலுடன் பெய்த மழையால் அப்பகுதி மக்கள் மின் வசதி இல்லமலும், வீடுகளுக்குள் மழை நீர் சூழ்ந்ததாலும் இரவு முழுவதும் உறங்க முடியாமல் மிகுந்த அவதிக்குள்ளகினர்.

நீண்ட நாட்களாக மழை நீர் வடிகால் இல்லாமல் பொதுமக்கள் அவதிபட்டு வந்த நிலையில் கொல்லப்பட்டி கிராமத்தில் மழை நீர் வடிகால் அமைக்கப்பட்டது. இருப்பினும் அந்த மழை நீர் வடிகால் முறையான திட்டமிடல் இல்லாமல் சாலையின் உயரத்தை விட அதிக உயரத்தில் அமைக்கப்பட்டதால் மழை நீர் முழுமையாக வடியாமல் குடியிருப்புக்குள் புகுந்து மக்கள் அவதிக்குள்ளனார்.

விடிந்து காலை 8 மணி ஆகியும் நீரினை வெளியேற்ற எந்தவித நடவடிக்கை எடுக்காத நிர்வாகத்தை கண்டித்து உடனடியாக அப்பகுதி பொதுமக்கள் கிருஷ்ணகிரி திருவண்ணாமலை சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்து விரைந்து வந்த ஊத்தங்கரை போலீசார் மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி மழை நீரை வெளியேற்ற நடவடிக்கை எடுப்பதாக கூறியதை அடுத்து அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் இப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இந்த சம்பவத்தால் அந்த பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

Tags:    

Similar News