இடைவிடாமல் பெய்யும் கனமழை: நாகையில் 1 லட்சத்து 40 ஆயிரம் ஏக்கர் சம்பா நெற்பயிர் நீரில் மூழ்கியது
- நாகை மாவட்டத்தில் நேற்று தொடங்கிய கனமழை இன்று காலையும் நீடித்து பெய்து வருகிறது.
- சம்பா, தாளடி இளம்பயிர்கள் மழைநீரில் மூழ்கி அழுகி துர்நாற்றம் வீசி வருவதால் நாகை மாவட்ட விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
தஞ்சாவூர்:
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து பல்வேறு மாவட்டங்களில் பெய்து வருகிறது. இன்னும் 3 நாட்கள் கனமழை தொடரும் என சென்னை வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
நாகை மாவட்டத்தில் நேற்று தொடங்கிய கனமழை இன்று காலையும் நீடித்து பெய்து வருகிறது. இந்த தொடர்மழை காரணமாக நாகை ஒன்றியத்தில் பாலையூர், வடகுடி, கீழ்வேளூர் ஒன்றியத்தில் ஒதியத்தூர், ஓர்குடி, தலைஞாயிறு ஒன்றியத்தில் வெண்மணச்சேரி, ஈசனூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் சம்பா இளம் நெற்பயிர்கள் மூழ்கி உள்ளது. கனமழை ஓய்ந்தால் மட்டுமே மழைநீரை வடிய வைக்க முடியும் என்று விவசாயிகள் காத்திருக்கின்றனர்.
நாகை மாவட்டத்தில் 80 ஆயிரம் ஏக்கர் சம்பா, 60 ஆயிரம் தாளடி ஏக்கர் என மொத்தம் 1 லட்சத்து 40 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் மழை நீரில் மூழ்கி உள்ளது. மேலும் இந்த கனமழை விவசாயிகளுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என விவசாயிகள் அச்சம் தெரிவித்துள்ளனர். சம்பா, தாளடி இளம்பயிர்கள் மழைநீரில் மூழ்கி அழுகி துர்நாற்றம் வீசி வருவதால் நாகை மாவட்ட விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
நாகை மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகாமையில் உள்ள தெத்தி சிவசக்தி குடியிருப்பு பகுதி மற்றும் கலெக்டர் அலுவலகம், மழை நீரால் சூழ்ந்து தனி தீவாக காட்சியளிக்கிறது. பால், காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வாங்க பொதுமக்கள் வெளியில் செல்ல முடியவில்லை. இதுகுறித்து தகவல் அறிந்ததும் மாவட்ட நிர்வாகம் சார்பில் ஜே.சி.பி. இயந்திரம் மூலம் தூர்வார உத்தரவிட்டு அங்கு மழை நீரை வடிய வைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த தேனூர் கதவணையில் இருந்து பிரியும் முடவன் வாய்க்கால் உட்பிரிவுகளான மருவத்தூர் வாய்க்கால், கோமனாண்டி வாய்க்கால் தண்ணீர் மூலம் புங்கனூர், மல்லுக்குடி, மருவத்தூர், வைத்தீஸ்வரன் கோயில், எடக்குடி வடபாதி உள்ளிட்ட 5000 ஏக்கரில் மின் மோட்டார் மூலம் நடவு பணியும், நேரடி நெல் விதைப்பின் மூலம் சாகுபடி செய்துள்ளனர்.
இதேபோல் கொள்ளிடம் பகுதியில் ஆச்சாள்புரம், நல்லூர், ஆர்ப்பாக்கம், புளியந்துறை, பச்ச பெருமாள்நல்லூர், பழைய பாளையம், வேட்டங்குடி, வழுதலைக்குடி, தண்ணீர் பந்தல், ஆயங்குடி பள்ளம், குன்னம், பெரம்பூர், மகாராஜபுரம் உள்ளிட்ட கிராமங்களில் சுமார் 5000 ஏக்கர் சம்பா நேரடி விதைப்பு செய்தனர். தற்போது பெய்த தொடர் மழையால் இந்த ஒரு மாத வயதுள்ள 10 ஆயிரம் ஏக்கர் நெற்பயிரில் மழை நீரில் மூழ்கி உள்ளது. தொடர்ந்து கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்த நிலையில் தொடர்ந்து மழை பெய்தால் சம்பா பயிர்கள் அழுகும் நிலை ஏற்படும் என வேதனையுடன் விவசாயிகள் தெரிவித்தனர்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி கீழமாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கோமளவல்லி. இவரது வீடு கனமழையால் மண்சுவர் முற்றிலும் இடிந்து விழுந்து சேதமானது. இதில் யாருக்கும் எந்த அசம்பாவிதமும் ஏற்படவில்லை. இதேபோல் அதே பகுதியை சேர்ந்த முஜிபூர் ரஹ்மான் என்பவரது வீடும் மழையால் இடிந்து சேதம் அடைந்தது.
இதுகுறித்து அறிந்த நகர்மன்ற உறுப்பினர் நித்தியாதேவி பாலமுருகன் நேரில் சென்று ஆறுதல் கூறினார். தகவல் அறிந்த சீர்காழி போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவக்குமார், கோமளவள்ளி வீட்டினை பார்வையிட்டு சேதம் அடைந்திருப்பதால் முற்றிலுமாக இடித்து விடும்படி அறிவுறுத்தினார். கீழத்தென்பாதி அங்கன்வாடி கட்டடம் அருகே இருந்த வேப்பமரம் மழையால் முறிந்து விழுந்தது. தீயணைப்புத்துறையினர் விரைந்து சென்று வெட்டி அகற்றினர்.