52 பேரன்கள்-பேத்திகளுடன் 100-வது பிறந்தநாளை கொண்டாடிய மூதாட்டி
- நான் 100 வயது வரை வாழ்வேன் என்று நினைக்கவில்லை. இது இறைவன் கொடுத்த வரம்.
- இன்றைய மக்களின் வாழ்க்கை முறை மிகவும் மாறிவிட்டது. உணவில் முன்பு போல் சத்து இல்லை.
தொண்டி:
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடனை அருகே ஆதியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பிச்சை தேவர். இவரது மனைவி ராஜாமணி (வயது 100), இவருக்கு 2 மகன்கள், 2 மகள்கள் உள்ளனர். இவர்கள் மூலம் 52 பேரன்கள், பேத்திகள், கொள்ளு பேரன்கள், கொள்ளு பேத்திகள் உள்ளனர்.
ராஜாமணி தனது மகன்கள், மகள்கள், பேரன்-பேத்திகள் முன்னிலையில் தனது 100-வது பிறந்தநாளை கொண்டாடினார். அப்போது அவர் கேக் வெட்டி தனது பேரன்-பேத்திகளுக்கு ஊட்டினார். அவரை கிராம மக்கள் அனைவரும் வாழ்த்தினர். இன்றைய காலகட்டத்தில் 50 வயது வரை வாழ்வது அரிதாக உள்ளது. அதிலும் கொரோனா போன்ற நோய் தொற்றுகளால் பலர் உயிரிழந்து விட்டனர். ஆனால் ராஜாமணி பாட்டி 100 வயதிலும் நல்ல ஆரோக்கியமாக உள்ளார். அவர் தனது 5-வது தலைமுறையை பார்த்து விட்டார்.
ராஜாமணி பாட்டி தனது 100-வது பிறந்தநாளை கொண்டாடியது தொடர்பாக கூறும்போது, நான் 100 வயது வரை வாழ்வேன் என்று நினைக்கவில்லை. இது இறைவன் கொடுத்த வரம். எனது வாழ்நாளில் பல அனுபவங்களை பெற்று விட்டேன். இன்றைய மக்களின் வாழ்க்கை முறை மிகவும் மாறிவிட்டது. உணவில் முன்பு போல் சத்து இல்லை. நான் 52 பேரன்-பேத்திகளை பார்த்து விட்டேன். இது எனக்கு மிகவும் மகிழ்ச்சியை அளிக்கிறது. எதற்கும் கவலைப்படாமல் இருந்தால் 100 வயது வரை வாழலாம். அதற்கு உடல் உழைப்பும் அவசியம் என்றார்.