தமிழ்நாடு செய்திகள்

நீர் நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் ஏறி காந்தியவாதி திடீர் போராட்டம்

Published On 2023-02-16 12:41 IST   |   Update On 2023-02-16 12:41:00 IST
  • கையில் தேசியக்கொடியுடன் விராலிமலை வட்டார வளர்ச்சி அலுவலகம் எதிர்ப்புறம் உள்ள மேல்நிலை நீர்த் தேக்க தொட்டி மீது அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார்.
  • ஆக்கிரமிப்புகள் அகற்றுவதற்கான நடவடிக்கை துரிதப்படுத்தப்படும் என்று அதிகாரிகள் தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது.

விராலிமலை:

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே அமைந்துள்ளது கொடும்பாளூர் சத்திரம் கிராமம். இங்குள்ள நீர்ப்பிடிப்பு பகுதியில் சிலர் ஆக்கிரமித்து வணிக நிறுவனம், கடைகள், குடியிருப்பு என கட்டி நீண்ட நாட்களாக இருந்து வருகின்றனர். இதனால் நீர் வழித்தடங்களில் பல்வேறு சிரமங்கள் எழுந்தன.

இந்த ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் காந்தியவாதி செல்வராஜ் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஆக்கிரமிப்புகளை அகற்றி தருமாறு வருவாய்த் துறை மற்றும் உள்ளாட்சித் துறையினருக்கு அறிவுரை வழங்கி இருந்தனர்.

இதனைத் தொடர்ந்து கடந்த 2020 ஆம் ஆண்டு ஆக்கிரமிப்பை அகற்ற சென்ற அதிகாரிகளுடன் ஆக்கிரமிப்பாளர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு நீதிமன்றத்திற்கு சென்று குறிப்பிட்ட கால தடையாணையினை பெற்றனர். அந்த தடையாணை காலம் தற்போது முடிவடைந்துள்ளது.

எனவே உடனடியாக அந்த ஆக்கிரமிப்புகளை அகற்றித் தருமாறு கோரி காந்தியவாதி செல்வராஜ் இன்று காலை கையில் தேசியக்கொடியுடன் விராலிமலை வட்டார வளர்ச்சி அலுவலகம் எதிர்ப்புறம் உள்ள மேல்நிலை நீர்த் தேக்க தொட்டி மீது ஏறினார். பின்னர் அங்கு அமர்ந்துகொண்டு போராட்டத்தில் ஈடுபட்டார்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் லாவகமாக மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியின் படிகளில் ஏறி அவர் பின்னால் சென்று அவரை கட்டியணைத்து அசம்பாவிதம் ஏற்படாமல் தடுத்தனர். தொடர்ந்து அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி கீழே அழைத்து வந்தனர்.

இதனை தொடர்ந்து வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் அவரது கோரிக்கை தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு நீர் நிலை ஆக்கிரமிப்புகள் அகற்றுவதற்கான நடவடிக்கை துரிதப்படுத்தப்படும் என்று அதிகாரிகள் தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது. காந்தியவாதியின் இந்த திடீர் போராட்டம் விராலிமலையில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

Similar News