தமிழ்நாடு

வனப்பகுதியில் கிடந்த மனித மண்டை ஓடு, எலும்பு கூடு- மாயமான மாணவி உடலா என போலீஸ் விசாரணை

Published On 2023-02-03 08:10 GMT   |   Update On 2023-02-03 08:10 GMT
  • பரிசோதனையின் முடிவு வந்த பிறகே உடல் காணாமல் போன மாணவியுடையதா என்பது தெரிய வரும்.
  • பொருட்களை சேகரித்த போலீசார் எலும்பு கூடு மற்றும் மண்டை ஓட்டை தடயவியல் சோதனை செய்ய அனுப்பி வைத்தனர்.

தருமபுரி:

தருமபுரி மாவட்டம், அரூர் அருகேயுள்ள எஸ்.அம்மாபாளையம் காப்பு காடு பகுதியில் சல்மடுவு ஓடை உள்ளது.

இந்த பகுதியில் மண்டை ஓடு மற்றும் மனித எலும்பு கூடு கிடந்தது. அவ்வழியாக கண்காணிப்பு பணிக்கு சென்ற கோட்டப்பட்டி வனக்காப்பாளர் ராஜா இதை பார்த்து அரூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

இதையடுத்து போலீசார் அங்கு விரைந்து வந்தனர். இந்நிலையில் கோட்டப்பட்டி போலீசில் கடந்த வருடம் செப்டம்பர் மாதம் ஞானசவுந்தரியா என்ற 17 வயது மாணவி காணாமல் போய் விட்டதாக அவரது தந்தை பெருமாள் என்பவர் புகார் செய்திருந்தார்.

இதனால் பெருமாளை சம்பவ இடத்துக்கு போலீசார் வரவழைத்தனர். எலும்பு கூடு கிடந்த இடத்தில் கைகடிகாரம், வளையல்கள், கவரிங் சங்கிலி, துப்பட்டா போன்றவை கிடந்தன.

அதனை பார்த்த பெருமாள் இது தனது மகள் அணிந்திருந்த பொருட்கள் போலவே உள்ளது என்று தெரிவித்தார். இதையடுத்து அங்கிருந்த பொருட்களை சேகரித்த போலீசார் எலும்பு கூடு மற்றும் மண்டை ஓட்டை தடயவியல் சோதனை செய்ய அனுப்பி வைத்தனர்.

பரிசோதனையின் முடிவு வந்த பிறகே அந்த உடல் காணாமல் போன மாணவியுடையதா என்பது தெரிய வரும்.

காப்பு காடு பகுதியில் மனித எலும்பு கூடு கிடந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Tags:    

Similar News