காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு- ஈரோட்டில் 11 முகாம்களில் 1,056 பேர் பாதுகாப்பாக தங்க வைப்பு
- ஈரோடு மாவட்டத்தில் உள்ள காவிரி ஆற்றங்கரை பகுதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
- அமைச்சர் முத்துசாமி வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
ஈரோடு:
கர்நாடகாவில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஏற்கனவே மேட்டூர் அணை தனது முழு கொள்ளளவான 120 அடியை எட்டி உள்ள நிலையில் தொடர்ந்து அணைக்கு வரும் தண்ணீர் நேரடியாக காவிரி ஆற்றில் திறந்து விடப்படுகிறது.
வினாடிக்கு 1.85 லட்சம் கன அடி தண்ணீர் காவிரி ஆற்றில் வெளியேற்றப்படுவதால் ஈரோடு மாவட்டத்தில் உள்ள காவிரி ஆற்றங்கரை பகுதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பவானியில் உள்ள 100-க்கும் மேற்பட்ட வீடுகளில் வெள்ளம் சூழ்ந்தது.
இதே போல் அம்மாபேட்டையில் 10-க்கும் மேற்பட்ட வீடுகள், ஈரோடு கருங்கல்பாளையம், காவிரி ஆற்றங்கரை பகுதியில் உள்ள வீடுகள், கொடுமுடியில் 60-க்கும் மேற்பட்ட வீடுகள் என மாவட்டம் முழுவதும் 282-க்கும் மேற்பட்ட வீடுகளில் வெள்ளம் சூழ்ந்தது.
இதனால் இந்த பகுதியைச் சேர்ந்த 343 குடும்பங்களை சேர்ந்த 1,056 பேர் மாவட்டம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 11 முகாம்களில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளனர். மேலும் போலீசார் இந்த பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மாவட்டம் நிர்வாகம் சார்பில் மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் அமைச்சர் முத்துசாமி வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
ஈரோடு மாநகராட்சி மாணிக்கம்பாளையம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு வார்டு 11-இல் மழை நீரினால் பாதாள சாக்கடையில் ஏற்பட்டுள்ள அடைப்பு காரணமாக தாழ்வான பகுதிகளில் மழைநீர் சூழ்ந்தது. அதையும் அமைச்சர் முத்துசாமி ஆய்வு செய்தார். மேலும் பொதுமக்கள் தங்கவைக்கப்பட்டுள்ள முகாம்களையும் ஆய்வு செய்தார்.
மேலும் காவிரி ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்களுக்கு சுகாதாரத்துறையின் மூலம் மருத்துவ உதவிகளை மேற்கொள்வது குறித்தும் ஆய்வு மேற்கொண்டார். அமைச்சர் ஆய்வின்போது வருவாய்துறை, மின்சார துறை, தீயணைப்பு துறை உள்பட அனைத்து துறையினரும் உடன் இருந்தனர்.
துணைமேயர் செல்வராஜ், மாநகராட்சி செயற்பொறியாளர் ஜெயக்குமாரும் உடன் இருந்தனர்.
இதேபோல் வெள்ளம் பாதித்த பகுதிகளை ஈரோடு மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மகேஸ்வரன் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். பவானி நகரில் காவிரி ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்டவர்கள் தங்கி உள்ள முகாமிற்கு சென்ற மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மகேஸ்வரன் பொதுமக்களுக்கு செய்யப்பட்டுள்ள வசதிகள் குறித்து கேட்டறிந்தார்.
இதேப்போல் கொடுமுடி பகுதியில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கையும் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை உடனடியாக செய்து கொடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.