தமிழ்நாடு

சென்னை வரும் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் 1 மணி நேரம் தாமதம்- வேலைக்கு செல்பவர்கள் அவதி

Published On 2023-09-21 07:45 GMT   |   Update On 2023-09-21 07:46 GMT
  • தண்டவாளத்தில் விழுந்து கிடந்த மரத்தை அகற்றும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர்.
  • செங்கல்பட்டு ரெயில் நிலையத்தில் கூட்ட நெரிசல் காணப்பட்டது.

செங்கல்பட்டு:

செங்கல்பட்டு மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் நேற்று நள்ளிரவு முதல் பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக செங்கல்பட்டு அருகே ஒத்திவாக்கம் ரெயில் நிலையத்தில் நடை மேடையில் நின்று கொண்டிருந்த மரம் முறிந்து தண்டவாளத்தில் விழுந்தது.

இதன் காரணமாக அந்த வழியாக ரெயில் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. அந்த நேரத்தில் தென் மண்டலங்களில் இருந்து சென்னை வந்த எக்ஸ்பிரஸ் ரெயில்கள் நடுவழியில் நிறுத்தப்பட்டன.

அதன்பிறகு தண்ட வாளத்தில் விழுந்து கிடந்த மரத்தை அகற்றும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர். இதனால் தென் மாவட்டங்களில் இருந்து வந்த ரெயில்கள் சுமார் 1 மணி நேரம் வரை தாமதமாக வந்தன. சென்னை வந்த அனந்தபுரி எக்ஸ்பிரஸ், முத்துநகர் எக்ஸ்பிரஸ், சேது எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட எக்ஸ்பிரஸ் ரெயில்கள் வருவதில் தாமதம் ஏற்பட்டது.

செங்கல்பட்டு ரெயில் நிலையத்தில் இருந்து சென்னை தாம்பரம், மாம்பலம், எழும்பூர் ஆகிய பகுதிகளில் வேலைக்கு செல்பவர்கள், மாணவர்கள் ஆகியோர் அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரெயில் ஏறி செல்வது வழக்கம். அந்த ரெயில் சுமார் 1 மணி நேரம் தாமதமாக வந்ததால் சென்னைக்கு வேலைக்கு செல்பவர்களும், மாணவ-மாணவிகளும் பெரிதும் அவதிப்பட்டனர். இதனால் செங்கல்பட்டு ரெயில் நிலையத்தில் கூட்ட நெரிசல் காணப்பட்டது.

Tags:    

Similar News