தமிழ்நாடு செய்திகள்

அ.தி.மு.க. தலைமையில் விரைவில் சிறப்பான கூட்டணி அமையும்: எடப்பாடி பழனிசாமி

Published On 2024-02-08 13:58 IST   |   Update On 2024-02-08 13:58:00 IST
  • அ.தி.மு.க.வை பொறுத்தவரைக்கும் மக்களுக்காக பாடுபடுகின்ற கட்சி.
  • நம்முடைய உரிமைகளை பாதுகாக்க பிரிந்து விட்டோம்.

சேலம்:

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் இன்று அ.தி.மு.க. சார்பில் திருச்செங்கோடு, பரமத்திவேலூர், குமாரபாளையம் ஆகிய 3 சட்டமன்ற தொகுதிகளை சேர்ந்த அ.தி.மு.க. தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகளுக்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு பல்வேறு ஆலோசனைகள் வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது:-

இந்த ஆலோசனை கூட்டத்தின் நோக்கம் எதிரிகளை வேரோடும், கூண்டோடும் உங்களது திறமையால் அறிவு கூர்மையால் வீழ்த்த வேண்டும் என்பதே நோக்கம் ஆகும். நான் தகவல் தொழில் நுட்ப பிரிவு கூட்டத்தில் கலந்து கொள்வது இதுதான் முதல் முறையாகும்.

இன்றைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டும் என்றே திட்டமிட்டு அ.தி.மு.க. மீது வீண் பழி சுமத்திக்கொண்டு இருக்கிறார். அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் நம்முடைய ஐ.டி. விங் நிர்வாகிகள் உண்மை செய்தியை மக்களிடம் எடுத்துச் சொல்ல வேண்டும்.

தி.மு.க. அரசு நம்முடைய திட்டங்களை ஸ்டிக்கர் ஒட்டி செயல்படுத்துகிறது. தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு இந்த மாவட்டத்தில் ஒரு துரும்பை கூட கிள்ளிபோடவில்லை. இங்கு என் முன் அமர்ந்து இருக்கக்கூடிய இளைஞர்கள் தான் வருங்கால இந்தியாவை ஆளக்கூடிய சிப்பாய்கள். தமிழ்நாட்டை ஆள பிறந்தவர்கள். உங்கள் உள்ளத்தில் திறமை புதைந்து கிடக்கிறது. அதை வெளிப்படுத்துங்கள். இந்த தேர்தலின் மூலமாக. வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. செய்த சாதனைகள் இந்த தி.மு.க. ஆட்சியில் மக்கள் பட்ட துன்பங்களை மக்களிடத்தில் நேரடியாக வலைதளங்கள் மூலமாக கொண்டு சேர்ப்பது உங்களின் தலையாய கடமை.

விஞ்ஞான உலகத்தில் எதிரிகளை எப்படி வீழ்த்துவது என்பதை வலைதளம் மூலம் மக்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும். 40 சதவீத இளைஞர்கள் தற்போது சமூக வலைதளத்தை பயன்படுத்துகின்றனர். எனவே வலைதளங்களில் கருத்துக்களை பதிவிடுவது முக்கியம் ஆட்சியாளர்கள் பணத்தை நம்பியுள்ளனர். ஆனால் நாம் மக்களை நம்பி கட்சி நடத்துகிறோம்.

அ.தி.மு.க. ஜனநாயக கட்சி., தி.மு.க. ஒரு வாரிசு அரசியல். தி.மு.க. தலைவர் கருணாநிதி மறைவிற்கு பிறகு அவருடைய மகன் மு.க.ஸ்டாலின் ஏதோ தில்லுமுள்ளு செய்து ஆட்சிக்கு வந்துள்ளார். இதையடுத்து அவரது மகன் உதயநிதி ஸ்டாலினை விளையாட்டு துறை அமைச்சராக்கி அவரை முன்னிலை படுத்திக்கொண்டு இருக்கிறார்கள். தி.மு.க. கட்சிக்காக உழைத்தவர்கள் பல ஆண்டு காலமாக அந்த கட்சியில் உயர் பதவிகள் பெற்று பல ஆண்டுகாலமாக கட்சியில் இருக்கிற மூத்த அமைச்சர்களை பின்னுக்கு தள்ளி இருக்கிறார்கள்.

அ.தி.மு.க.வை பொறுத்தவரைக்கும் மக்களுக்காக பாடுபடுகின்ற கட்சி. பாராளுமன்ற தேர்தல் தேதி இந்த மாத இறுதி அல்லது அடுத்த மாதம் முதல் வாரத்தில் அறிவிக்கப்படலாம். மக்களுடைய குரல்களை பாராளுமன்றத்தில் வெளிப்படுத்துவது நம்முடைய எம்.பி.க்கள்.

இன்றைக்கு கூட்டணி என்று வந்து விட்டால் தேசிய அளவில் இருக்கின்ற கட்சிகளோடு கூட்டணி வைத்துவிட்டால் தேசிய அளவில் பார்வை சென்று விடுகிறது. நம்முடைய மாநிலத்தின் பிரச்சனையை காதுகொடுத்து கேட்பது கிடையாது. அதனால் பாதிக்கப்படுவது நாம். ஆகவே தான் தமிழ்நாட்டின் மக்களுடைய உரிமைகளை பாதுகாக்க, தமிழ்நாட்டு மக்களுக்கு தேவையான திட்டங்களை கொண்டு வர, நிதியை பெற்று வர, புயல், வெள்ளம், வறட்சி போன்ற காலங்களில் தமிழ்நாட்டு மக்கள் படுகின்ற துன்பங்களை யார் நிவர்த்தி செய்கிறார்களோ அவர்களுக்கு நாம் மத்தியில் பிரச்சனைகள் அடிப்படையில் ஆதரவு கொடுப்போம்.

ஓட்டு போட்ட மக்கள் தமிழ்நாடு, வேட்பாளர்களை தேர்ந்தெடுப்பது தமிழ்நாட்டு மக்கள். ஆகவே நாட்டு மக்கள் பிரச்சனைகள் வருகிற போது அவர்களுடைய பிரச்சனைகளை எடுத்துச் சொன்னால் அவர்கள் காது கொடுத்து கேட்பது கிடையாது. ஆகவே தான் நாங்கள் தனியாக பிரிந்து விட்டோம். நம்முடைய உரிமைகளை பாதுகாக்க பிரிந்து விட்டோம்.

காரில் இருந்து ஒவ்வொரு டயர் கழண்டு ஓடுவது போல் இந்தியா கூட்டணியில் இருந்து ஒவ்வொரு கட்சியாக பிரிந்து செல்கிறது. கடந்த முறை ராகுல் பிரதமர் வேட்பாளர் என்று ஸ்டாலின் அறிவித்தார். தற்போது இந்தியா கூட்டணி அறிவித்தார் அவர் ஒரு ராசியானவர்.

அ.தி.மு.க.வை பொறுத்த வரைக்கும் பொறுத்து இருந்து பாருங்கள் அ.தி.மு.க. தலைமையில் சிறப்பான கூட்டணி அமைக்கப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Tags:    

Similar News