மாமல்லபுரம் பேரூராட்சியில் 3 தி.மு.க. கவுன்சிலர்கள் அ.தி.மு.க.வில் இணைந்தனர்
- மாமல்லபுரம் பேரூராட்சியை அ.தி.மு.க. கைப்பற்றியது. அ.தி.மு.க.வை சேர்ந்த வளர்மதி எஸ்வந்தராவ் தலைவராகவும், ராகவன் துணைத்தலைவராகவும் பொறுப்பேற்றனர்.
- அ.தி.மு.க.வில் இணைந்த கவுன்சிலர்கள் 3 பேரும் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற உள்ளனர்.
மாமல்லபுரம்:
மாமல்லபுரம் பேரூராட்சியில் மொத்தம் 15 வார்டுகள் உள்ளன. கடந்த ஆண்டு நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க.-9, தி.மு.க-4, ம.தி.மு.க-1, சுயேச்சை-1 வெற்றி பெற்றனர். இதைத்தொடர்ந்து மாமல்லபுரம் பேரூராட்சியை அ.தி.மு.க. கைப்பற்றியது. அ.தி.மு.க.வை சேர்ந்த வளர்மதி எஸ்வந்தராவ் தலைவராகவும், ராகவன் துணைத்தலைவராகவும் பொறுப்பேற்றனர்.
இந்த நிலையில் தி.மு.க.வை சேர்ந்த கவுன்சிலர்கள் சீனிவாசன், சரிதா கோவிந்தராஜ், கெஜலட்சுமி ஆகிய 3 பேரும் தி.மு.க.வினரின் செயல்பாடுகள் சரியில்லை எனக்கூறி திருக்கழுகுன்றம் கிழக்கு ஒன்றிய அ.தி.மு.க. செயலாளரும் மாமல்லபுரம் பேரூராட்சி துணைத்தலைவருமான ராகவன் முன்னிலையில் அ.தி.மு.க.வில் இணைந்தனர். இவர்களில் கவுன்சிலர்கள் சீனிவாசன், சரிதா கோவிந்தராஜ் ஏற்கனவே அ.தி.மு.க.வில் இருந்து கடந்த மார்ச் மாதம் தி.மு.க.வில் இணைந்தவர்கள் ஆவர். தற்போது அவர்கள் மீண்டும் அ.தி.மு.க.விற்கு திரும்பி உள்ளனர். அ.தி.மு.க.வில் இணைந்த கவுன்சிலர்கள் 3 பேரும் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற உள்ளனர்.