சிவகங்கை, விருதுநகர் நிர்வாகிகளுடன் திமுக தேர்தல் ஒருங்கிணைப்பு குழு ஆலோசனை
- அண்ணா அறிவாலயத்தில் 2 தொகுதி தி.மு.க. நிர்வாகிகளையும் அழைத்து ஆலோசனை நடத்தப்பட்டது.
- சிவகங்கை, விருதுநகர் தொகுதியை இதுவரை காங்கிரசுக்கு ஒதுக்கியது போதும். இந்த முறை தி.மு.க.வுக்கு ஒதுக்க ஏற்பாடு செய்யுங்கள்.
சென்னை:
பாராளுமன்ற தேர்தலுக்கு ஒவ்வொரு கட்சிகளும் தீவிரமாக தயாராகி வருவது போல் தி.மு.க.வும் தேர்தல் பணிகளை மேற்கொண்டு வருகிறது.
அந்த வகையில் தேர்தலுக்கான பணிகளை ஒருங்கிணைக்கவும், மேற்பார்வையிடவும் தி.மு.க.வில் முதன்மை செயலாளர் கே.என்.நேரு, அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, அமைச்சர்கள் எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரை கொண்ட குழுவினர் மாவட்ட வாரியாக கட்சி நிர்வாகிகளை அழைத்து தொகுதி நிலவரம் குறித்து கேட்டறிந்து வருகின்றனர்.
வெற்றி வாய்ப்பு எப்படி உள்ளது? இப்போது எம்.பி.யாக இருப்பவரின் செயல்பாடு எப்படி இருக்கிறது? என்பது குறித்து உதயநிதி கருத்து கேட்டு வருகிறார். இதுவரை 10 தொகுதி வரை கருத்து கேட்கப்பட்டு உள்ளது.
இன்று சிவகங்கை, விருதுநகர் ஆகிய 2 பாராளுமன்ற தொகுதிகளுக்கான தி.மு.க. நிர்வாகிகளை அழைத்து அண்ணா அறிவாலயத்தில் ஆலோசனை நடத்தப்பட்டது.
இந்த 2 தொகுதியும் கடந்த பாராளுன்ற தேர்தலில் காங்கிரஸ் வென்ற தொகுதியாகும். சிவகங்கையில் கார்த்தி சிதம்பரமும், விருதுநகரில் மாணிக்கம் தாகூரும் காங்கிரஸ் எம்.பி.யாக உள்ளனர்.
இந்த நிலையில் அண்ணா அறிவாலயத்தில் 2 தொகுதி தி.மு.க. நிர்வாகிகளையும் அழைத்து ஆலோசனை நடத்தப்பட்டது.
அப்போது கட்சி நிர்வாகிகள் உதயநிதி ஸ்டாலினிடம் கூறும்போது சிவகங்கை, விருதுநகர் தொகுதியை இதுவரை காங்கிரசுக்கு ஒதுக்கியது போதும். இந்த முறை தி.மு.க.வுக்கு ஒதுக்க ஏற்பாடு செய்யுங்கள். காங்கிரசுக்கு வேறு தொகுதியை மாற்றிக் கொடுங்கள்.
இந்த 2 மாவட்டங்களை சேர்ந்த தி.மு.க.வினர் எம்.பி.யாக வேண்டாமா? நம் கட்சி நிர்வாகிகளுக்கு இந்த தொகுதியை கேட்டு பெறுங்கள் என்று வலியுறுத்தினார்கள்.
இன்றைய கூட்டத்தில் ஒருங்கிணைப்பு குழு நிர்வாகிகளுடன் விருதுநகர், சிவகங்கை மாவட்ட பொறுப்பாளர் அமைச்சர்களான பெரியகருப்பன், ரகுபதி, கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் ஆகியோரும் கூட்டத்தில் பங்கேற்றிருந்தனர்.
விருதுநகர் தொகுதியை இந்த முறை ம.தி.மு.க. கேட்டு பெற முயற்சி செய்து வருகிறது. காங்கிரசும் தொகுதியை தக்க வைக்க விரும்புகிறது. இந்த நிலையில்தான் தி.மு.க.வினரும் தங்களுக்கு இந்த தொகுதியை ஒதுக்குமாறு கோரிக்கை வைத்து உள்ளனர்.
இன்று மாலை தென்காசி, நெல்லை தொகுதிகளுக்கான ஆலோசனை கூட்டம் அறிவாலயத்தில் நடைபெற உள்ளது. இதற்காக 2 மாவட்ட நிர்வாகிகளும் சென்னை வந்துள்ளனர்.