தமிழ்நாடு செய்திகள்

கவுண்டமணிக்கு எதிரான கட்டுமான நிறுவனத்தின் மனு தள்ளுபடி

Published On 2024-05-14 12:48 IST   |   Update On 2024-05-14 13:50:00 IST
  • வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு சம்பந்தப்பட்ட கட்டிடத்தை ஆய்வு செய்ய வழக்கறிஞர் ஆணையரை நியமித்தது.
  • ஐகோர்ட்டின் இந்த உத்தரவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் கட்டுமான நிறுவனம் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

சென்னை:

சென்னை கோடம்பாக்கம் ஆற்காடு சாலையில் கடந்த 1996-ம் ஆண்டு நளினிபாய் என்பவருக்கு சொந்தமான நிலத்தை நடிகர் கவுண்டமணி வாங்கி அதை தனியார் கட்டுமான நிறுவனத்திடம் கொடுத்து 22,700 சதுர அடி பரப்பிலான வணிக வளாகத்தை 15 மாதங்களில் கட்டி முடித்து ஒப்படைக்க வேண்டுமென ஒப்பந்தம் செய்துள்ளார்.

கட்டுமான பணிகளுக்காகவும், ஒப்பந்ததாரர் கட்டணமாக ரூ.3 கோடியே 58 லட்சத்துக்கு ஒப்பந்தம் போடப்பட்டு, 1996-ம் ஆண்டு முதல் 1999-ம் ஆண்டு வரை ரூ.ஒரு கோடியே 4 லட்சம் செலுத்திய நிலையில், 2003-ம் ஆண்டு வரை கட்டுமான பணிகள் தொடங்கவில்லை எனக் கூறி, கவுண்டமணி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு சம்பந்தப்பட்ட கட்டிடத்தை ஆய்வு செய்ய வழக்கறிஞர் ஆணையரை நியமித்தது, அதன்படி ஆய்வு நடத்திய வழக்கறிஞர் ஆணையர், கவுண்டமணி வழங்கிய நிலத்தில் வெறும் ரூ.46 லட்சத்து 51 ஆயிரத்துக்கு மட்டுமே பணிகள் முடிக்கப்பட்டிருப்பதாக அறிக்கை தாக்கல் செய்தார். இந்த அறிக்கையின் அடிப்படையில், நடிகர் கவுண்டமணியிடம் இருந்து பெற்ற 5 கிரவுண்ட் 454 சதுர அடி நிலத்தை மீண்டும் அவரிடமே ஒப்படைக்க வேண்டும் என்றும், கடந்த 2008-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் மாதம் ஒன்றுக்கு ஒரு லட்ச ரூபாய் வீதம் இழப்பீடாக கவுண்டமணிக்கு வழங்க வேண்டும் என்றும தீர்ப்பளித்தது.

ஐகோர்ட்டின் இந்த உத்தரவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் கட்டுமான நிறுவனம் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் பர்திவாலா, மனோஜ் மிஸ்ரா ஆகியோர் பிறப்பித்த உத்தரவில், "ஒப்பந்தத்தை போட்டுவிட்டு அதை முடித்து கொடுக்க இருப்பதை எப்படி ஏற்க முடியும்" என்று கூறி மனுவை அதிரடியாக தள்ளுபடி செய்தனர்.

Tags:    

Similar News