தமிழ்நாடு

கோவை மாவட்டத்தில் 80 பறக்கும் படைகள் கலைப்பு

Published On 2024-04-22 09:39 GMT   |   Update On 2024-04-22 09:39 GMT
  • பறிமுதல் செய்யப்படும் பணம் கோவை மாவட்ட அரசு கருவூலத்திலும், நகைகள் மற்றும் தங்க கட்டிகள் வருமான வரித்துறை அலுவலகத்திலும் ஒப்படைக்கப்பட்டது.
  • 10 பறக்கும் படையினர் மட்டும் மாவட்டத்தில் உள்ள 11 சோதனை சாவடிகளில் தொடர்ந்து வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

கோவை:

தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நாள் முதல் தேர்தல் நடைமுறைகள் அமலுக்கு வந்தன.

வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்கள் கொடுக்கப்படுகிறதா என்பதை கண்காணிக்க பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டன.

இவர்கள் மாவட்டம் முழுவதும் தீவிர சோதனையில் ஈடுபட்டு வந்தனர். மேலும், பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் ரூ.50 ஆயிரத்திற்கு மேல் வெளியில் எடுத்து செல்ல தடை விதிக்கப்பட்டது.

வியாபாரிகள் அதிகளவில் பணம் எடுத்துச்செல்லும்போது அதற்குரிய ஆவணங்களை காட்ட வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டிருந்தது.

அவ்வாறு முறையான ஆவணங்களை காட்டாதவர்களின் பணம் மற்றும் நகைகள் ஆகியவற்றை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்து வந்தனர்.

பறிமுதல் செய்யப்படும் பணம் கோவை மாவட்ட அரசு கருவூலத்திலும், நகைகள் மற்றும் தங்க கட்டிகள் வருமான வரித்துறை அலுவலகத்திலும் ஒப்படைக்கப்பட்டது.

பாராளுமன்ற தேர்தலையொட்டி பணம் மற்றும் பரிசு பொருட்கள் கொடுப்பதை தடுக்கும் விதமாகவும், அதனை கண்காணிக்கவும், கோவை மாவட்டத்தில் 90 பறக்கும் படைகள் நியமிக்கப்பட்டிருந்தது. இதில் போலீசார், வருவாய்த்துறை, 7க்கும் மேற்பட்ட அதிகாரிகள் இடம் பெற்றிருந்தனர்.

கோவை மாவட்டத்தில் வாக்குப்பதிவு முடிவடைந்து விட்டதால், பறக்கும் படை எண்ணிக்கையை 90-ல் இருந்து 10 ஆக குறைத்துள்ளனர். இதற்கான உத்தரவு இன்று பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக இதுவரை பறக்கும் படையில் இடம் பிடித்து இருந்த அதிகாரிகள் மீண்டும் தங்கள் பணிக்கு திரும்பி பணியை தொடங்கினர்.

10 பறக்கும் படையினர் மட்டும் மாவட்டத்தில் உள்ள 11 சோதனை சாவடிகளில் தொடர்ந்து வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். ஜூன் 4-ந் தேதி வரை இந்த பறக்கும் படையினர் பணியில் இருப்பார்கள் என தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News