தமிழ்நாடு

கடற்கரையில் குழந்தைகள் காணாமல் போனதால் பரபரப்பு: கழுத்தில் மாட்டப்பட்ட அடையாள அட்டையால் உடனடியாக மீட்பு

Published On 2024-01-18 07:30 GMT   |   Update On 2024-01-18 07:30 GMT
  • பெற்றோர்களும், உறவினர்களுடன் ஆழமாக பேசி மகிழ்ந்ததில் குழந்தைகள் கண்காணிக்க தவறிவிட்டனர்.
  • போலீஸ் நிலையம் எண் அடங்கிய ஸ்டிக்கர் இடம் பெற்றதால் காணாமல் போன குழந்தைகளை எளிதாக கண்டுபிடிக்க முடிந்தது.

சென்னை:

காணும் பொங்கலை தினத்தில் சென்னை வாசிகள் நேற்று உற்சாகமாக கொண்டாடினார்கள். கடற்கரை, பூங்காக்களை ஆக்கிரமித்து கொண்டு குடும்பத்துடன் குதூகலமாக ஆடிப்பாடினார்கள். அதில் முக்கியமான பொழுது போக்கு மையமாக மெரினா கடற்கரை இடம் பெற்றது.

மெரினா கடற்கரையில் பல ஆயிரக்கணக்கான மக்கள் குடும்பத்துடன் கூடி மகிழ்ந்தனர். நண்பர்கள், உறவினர்கள் குடும்பமாக கடற்கரை மணல் பரப்பில் அமர்ந்தும், ஓடி விளையாடியும் நேரத்தை செலவிட்டனர். அங்கு அசம்பாவித சம்பவம் எதுவும் நடக்காமல் இருக்க போலீசார் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

12 இடங்களில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டு பைனாகுலர் மூலம் கண்காணித்தனர். கடலில் குளிக்க தடை விதித்து இருந்த நிலையில் மீறி வந்தவர்களை போலீசார் எச்சரித்து அனுப்பினார்கள்.

உழைப்பாளர் சிலை முதல் களங்கரை விளக்கம் வரை உள்ள மணல் பகுதி யில் குடும்பமாக அமர்ந்து தாங்கள் கொண்டு வந்த உணவு, நொறுக்கு தீணிகளை ஒருவருக்கொருவர் பரிமாறி சாப்பிட்டனர். அப்போது தங்கள் குழந்தைகளை மணலில் விளையாடவிட்டு பார்த்து ரசித்தனர். தங்கள் அருகில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகள் திடீரென திசைமாறி சென்றனர்.

பெற்றோர்களும், உறவினர்களுடன் ஆழமாக பேசி மகிழ்ந்ததில் குழந்தைகள் கண்காணிக்க தவறிவிட்டனர். இதனால் பலரது குழந்தைகள் காணாமல் போனது.

இரவிலும் பகலை போல வெளிச்சத்தை பரப்பும் உயர் மட்ட மின்விளக்குகள் அங்கு இருந்த போதிலும் குழந்தைகள், பெற்றோர் தெரியாமல் தடுமாறி சென்றன. அருகருகே குழு குழுவாக அமர்ந்து இருந்ததால் குழந்தைகளுக்கு தங்கள் பெற்றோரை கண்டு பிடிப்பதில் குழப்பம் ஏற்பட்டு அலைந்து திரிந்தனர். சில குழந்தைகள் அழத்தொடங்கின.

இதற்கிடையில் அடுத்த சில நிமிடங்களில் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை காணாமல் பதறி போனார்கள். அங்குமிங்கும் அலைந்து திரிந்தார்கள்.

காணும் பொங்கலை மகிழ்ச்சியாக கொண்டாடிய குடும்பத்தினர், குழந்தைகள் காணாமல் போனதால் அதிர்ச்சி அடைந்தனர். கடற்கரை பகுதியில் ஓடி திரிந்தனர்.

பின்னர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசாரிடம் அழுது கொண்டே தெரிவித்தனர். அவர்களை சமாதானப்படுத்திய போலீசார் கொஞ்ச நேரத்தில் குழந்தைகளை உங்களிடத்தில் ஒப்டைக்கிறோம். தைரியமாக இருங்கள் என்று ஆறுதல் படுத்தினார்கள். 'மைக்' மூலம் போலீசாரை உஷார்படுத்தி தனியாக சுற்றித் திரியும் குழந்தைகளை கண்காணித்தனர்.

மெரினா கடற்கரை பகுதி முழுவதும் பெண் மற்றும் ஆண் போலீசார் சல்லடை போட்டு தேடினார்கள்.

போலீசார் எடுத்த முன் எச்சரிக்கை நடவடிக்கையின் ஒரு பகுதியாக சிறு குழந்தைகளின் கழுத்தில் அடையாள அட்டை ஒன்று மாட்டப்பட்டு இருந்தது. அதில் குழந்தைகளின் பெயர், பெற்றோரின் செல்போன் எண், போலீஸ் நிலையம் எண் அடங்கிய ஸ்டிக்கர் இடம் பெற்றதால் காணாமல் போன குழந்தைகளை எளிதாக கண்டுபிடிக்க முடிந்தது.

மெரினா கடற்கரை கூட்டத்தில் 25 குழந்தைகளும், எலியட்ஸ் கடற்கரையில் 2 குழந்தைகளும், மொத்தம் 27 குழந்தைகள் காணாமல் போய் உடனடியாக மீட்டு பெற்றோர்களிடம் போலீசார் ஒப்படைத்தனர்.

குழந்தைகளை காணாமல் பதறிய பெற்றோர்கள் கிடைத்தவுடன் கண்ணீர்விட்டனர். போலீசாருக்கு நன்றியை தெரிவித்து கடற்கரையில் இருந்து கடந்து சென்றனர்.

Tags:    

Similar News