தமிழ்நாடு

"திமுக ஃபைல்ஸ்" அவதூறு வழக்கு- பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவு

Published On 2023-06-15 07:35 GMT   |   Update On 2023-06-15 07:41 GMT
  • அண்ணாமலை மீது திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு அவதூறு வழக்கு தொடர்ந்தார்.
  • அவதூறு வழக்கு சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

தமிழக பாரதிய ஜனதா கட்சித் தலைவர் அண்ணாமலை கடந்த ஏப்ரல் 14-ந் தேதி தி.மு.க. சொத்துப்பட்டியல் என்ற பெயரில் தி.மு.க.வில் உள்ள முக்கிய பிரமுகர்களின் சொத்துப் பட்டியலை வெளியிட்டார்.

அதில் முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு குடும்ப சொத்து ரூ.10,841 கோடி என்று அதில் இடம் பெற்றிருந்தது. இதற்கு அண்ணாமலை 48 மணி நேரத்தில் மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லையென்றால் ரூ.100 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என்று டி.ஆர்.பாலு சார்பில் மூத்த வழக்கறிஞர் வில்சன் அண்ணாமலைக்கு நோட்டீஸ் அனுப்பியிருந்தார்.

இதற்கு அண்ணாமலையின் வழக்கறிஞரான பாரதிய ஜனதா கட்சி துணைத்தலைவர் ஆர்.சி.பால்கனகராஜ் அளித்த பதில் நோட்டீசில் டி.ஆர்.பாலு மீதான சொத்து குவிப்பு குறித்து அண்ணாமலை தெரிவித்த கருத்துக்களில் அவர் இப்போதும் உறுதியாக உள்ளார். அதனால் டி.ஆர்.பாலுவிடம் அண்ணாமலை மன்னிப்பு கேட்க மாட்டார். ரூ.100 கோடி நஷ்டஈடும் வழங்க மாட்டார் என்று கூறியிருந்தார்.

அதுமட்டுமின்றி டி.ஆர்.பாலு குறித்த எந்த ஒரு அவதூறு கருத்துக்களையும் அண்ணாமலை தெரிவிக்கவில்லை. சொத்து மதிப்பு குறித்து அண்ணாமலை வெளியிட்ட அனைத்து தகவல்களும் உண்மையே. இதை மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே அண்ணாமலை இந்த பட்டியலை வெளியிட்டுள்ளார் என்றும் பால் கனகராஜ் அதில் குறிப்பிட்டு இருந்தார்.

இதை ஏற்றுக்கொள்ளாத டி.ஆர்.பாலு இன்று சைதாப்பேட்டை கோர்ட்டில் 17-வது நீதித்துறை நடுவர் அனிதா ஆனந்திடம் மனு தாக்கல் செய்தார். அதில் அண்ணாமலை வெளியிட்ட கருத்துக்கள் பொய்யானது. எனது பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் இருக்கிறது. எனவே அவதூறு சட்டத்தின் கீழ் அண்ணாமலை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

இதுதொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. இந்நிலையில், திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு தொடர்ந்த அவதூறு வழக்கில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஜூலை.14ல் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது.

Tags:    

Similar News