தமிழ்நாடு

சென்னையில் தனியார் பஸ்களை இயக்குவதற்கு அனுமதிக்க முடிவு?- போக்குவரத்துக்கழகத் தொழிலாளர்கள் எதிர்ப்பு

Published On 2023-03-04 10:49 GMT   |   Update On 2023-03-04 10:51 GMT
  • 1000 பஸ்களை "கிராஸ் காஸ்ட் ஒப்பந்த" அடிப்படையில் தனியாருக்கு கொடுக்க திட்டமிட்டுள்ளது.
  • உலக வங்கி உதவியுடன் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

சென்னை:

சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தின் சார்பில் 3436 பஸ்கள் தினமும் 625 வழித்தடங்களில் இயக்கப்படுகின்றன. நாள்தோறும் 29.50 லட்சம் மக்கள் பயணம் செய்கிறார்கள்.

8 அரசு போக்குவரத்து கழகத்திலேயே சென்னை பெருநகர போக்குவரத்து கழகம் தான் பெரியது. இங்கு 20 ஆயிரம் தொழிலாளர்கள் பணியாற்றி வருகிறார்கள்.

இந்நிலையில் மேலும் 1000 பஸ்களை "கிராஸ் காஸ்ட் ஒப்பந்த" அடிப்படையில் தனியாருக்கு கொடுக்க திட்டமிட்டுள்ளது. தனியாருக்கு சொந்தமான பஸ்களை இயக்கவும் அதற்கான செலவை ஒரு கிலோ மீட்டர் அடிப்படையில் நிர்ணயம் செய்து வழங்கவும் போக்குவரத்து கழகம் திட்டமிட்டு உள்ளது.

"உலக வங்கி உதவியுடன் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இத்திட்டத்தின் கீழ் இந்த ஆண்டு 500 பஸ்களும் 2025-ம் ஆண்டில் 500 பஸ்களும் தனியார் இயக்க அனுமதிக்கப்பட உள்ளது.

'கிராஸ் காஸ்ட்' ஒப்பந்தத்தின் அடிப்படையில் பஸ்களை தனியார் வழங்கவும், டிரைவர், கண்டக்டர் மற்றும் பராமரிப்பு செலவு, உதிரிபாகங்கள் கொள்முதல் உள்ளிட்ட பல்வேறு முக்கிய அம்சங்கள் குறித்து அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர்.

சென்னையில் பஸ்களை அதிகரிப்பதன் மூலம் பயணிகள் அதிகளவில் பயணம் செய்யவும் போக்குவரத்தின் தரத்தை மேம்படுத்தவும் இத்திட்டம் வழி வகுக்கும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

இத்திட்டத்தை செயல்படுத்த தனியார் ஆலோசனை குழு அமைக்க டெண்டர் விடப்படுகிறது. இக்குழு இத்திட்டத்தில் உள்ள சாதக-பாதகங்களை ஆய்வு செய்து போக்குவரத்து கழகத்திற்கு கொடுக்கும் என்று கூறப்படுகிறது.

இதுகுறித்து மாநகர போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறும்போது, இத்திட்டம் ஆரம்ப கட்டத்தில் தான் உள்ளது. உலக வங்கி நிதி உதவியுடன் செயல்படுத்த உள்ளது. இதற்கான ஆலோசனை கூட்டம் பல்வேறு கட்டங்களாக நடந்து வருகிறது.

விரைவில் இதற்கான அரசாணை வெளியிடப்படும். அதன்பிறகு தான் எந்த அடிப்படையில் இத்திட்டத்தை செயல்படுத்துவது என்பது தெளிவாக தெரியவரும் என்றனர்.

இதுகுறித்து சி.ஐ.டி.யு. தொழிற்சங்க பொதுச்செயலாளர் ஆறுமுக நயினார் கூறுகையில், தனியாருக்கு போக்குவரத்து கழகத்தை கொடுப்பதற்கு ஒரு முன்னோட்டமாக இதனை கருதுகிறோம். இதனால் தொழிலாளர்கள் பாதிக்கப்படுவார்கள். மும்பை உள்ளிட்ட சில மாநிலங்களில் அரசு போக்குவரத்து கழகத்தை தனியாருக்கு கொடுத்து நாசப்படுத்திவிட்டனர். அந்நிலை தமிழகத்தில் வேண்டாம் என்றார்.

Tags:    

Similar News