தமிழ்நாடு

தற்கொலைக்கு தள்ளும் சீன கடன் செயலிகள்: பொதுமக்கள் உஷாராக இருக்க வேண்டும்- சைபர் கிரைம் வேண்டுகோள்

Published On 2023-08-18 09:48 GMT   |   Update On 2023-08-18 10:32 GMT
  • சீனா மட்டுமின்றி பல்வேறு நாடுகளில் இருந்தும் கடன் செயலிகள் செயல்பட்டு வருகிறது.
  • எப்போதுமே ஆன்லைன் தொடர்புகளில் வரும் அறிமுகம் இல்லாத நபர்களிடம் உஷாராக இருப்பதே நல்லது.

சென்னை:

சீனாவை சேர்ந்த கடன் செயலியால் வெளி மாநிலங்களில் பலர் தற்கொலை செய்து கொண்டனர். இதனால் உஷாரான குஜராத் மற்றும் ஒடிசா மாநில போலீசார் நடவடிக்கை எடுத்து மோசடி கும்பலை கைது செய்து உள்ளனர்.

இந்த கடன் செயலிகளுக்கு மூளையாக செயல்பட்டு மேற்பார்வையிட்டு வந்த விருதுநகர் வாலிபரை ஒடிசா போலீசார் கைது செய்து அழைத்துச் சென்று உள்ளனர். சீன நிறுவனத்தில் இயக்குனராக பணியாற்றி வந்த சித்ரவேல் என்பவர் கைது செய்யப்பட்டு ஒடிசாவுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ள நிலையில் சைபர் கிரைம் போலீசார் பொதுமக்கள் உஷாராக இருக்க அறிவுறுத்தியுள்ளனர்.

சீனா மட்டுமின்றி பல்வேறு நாடுகளில் இருந்தும் கடன் செயலிகள் செயல்பட்டு வருகிறது. இதுபோன்ற செயலிகளில் சென்று எளிதாக கடன் வாங்கிக் கொள்ளலாம் என்று எண்ணும் பொதுமக்கள் வங்கியில் இருக்கும் தங்களது பணத்தை இழந்து தவித்து வருகிறார்கள்.

எப்போதுமே இதுபோன்ற அறிமுகம் இல்லாத செயலிகள் மற்றும் நபர்களிடம் கடன் வாங்க வேண்டும் என்று நினைக்கக் கூடாது. உரிய ஆவணங்களை காட்டினால் கடன் கொடுப்பதற்கு அங்கீகாரம் பெற்ற வங்கிகள் வரிசை கட்டி நிற்கின்றன. அது போன்ற வங்கிகளில் கடன் வாங்கி கொள்வதே சிறந்ததாகும்.

தற்போது அனைவரது கைகளிலுமே செல்போன்கள் தவழ்வதால் அறிமுகம் இல்லாத பலர் தொடர்பு கொண்டு பேசுவார்கள்.

அதுபோன்ற நபர்களிடம் எதுவும் பேசாமல் தொடர்பை துண்டித்து விட வேண்டும். இல்லையென்றால் அவர்கள் வீசும் வலையில் நிச்சயம் நீங்கள் சிக்கிக் கொள்வீர்கள்.

எனவே எப்போதுமே ஆன்லைன் தொடர்புகளில் வரும் அறிமுகம் இல்லாத நபர்களிடம் உஷாராக இருப்பதே நல்லது.

இவ்வாறு சைபர் கிரைம் போலீசார் தெரிவித்து உள்ளனர்.

Tags:    

Similar News