தமிழ்நாடு செய்திகள்

பகுதி நேர வேலை தருவதாக ஏமாற்றி பணம் மோசடி செய்யும் கும்பல்- சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை

Published On 2023-03-20 12:00 IST   |   Update On 2023-03-20 12:00:00 IST
  • யூடியூப் லிங்கை கிளிக் செய்ய வைத்து ஒரு கும்பல் புதுவித ஆன்லைன் மோசடியில் ஈடுபட்டு லட்சக்கணக்கில் பணத்தை பறித்து வருகிறது.
  • ஆன்லைன் மோசடியில் பொது மக்கள் எப்போதும் கவனமாக இருக்க வேண்டும்.

சென்னை:

ஸ்மார்ட்போன் பயன்படுத்துபவர்களிடம் ஆன்லைன் மூலம் மோசடி செய்து பணம் பறிக்கும் கும்பல் அதிகரித்து வருகிறது.

இதுதொடர்பாக போலீசார் தொடர்ந்து எச்சரிக்கை விடுத்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்கள்.

இந்நிலையில் பகுதி நேர வேலை தருவதாக கூறி யூடியூப் லிங்கை கிளிக் செய்ய வைத்து ஒரு கும்பல் புதுவித ஆன்லைன் மோசடியில் ஈடுபட்டு லட்சக்கணக்கில் பணத்தை பறித்து வருகிறது.

இதுதொடர்பாக சென்னை சைபர் குற்றப் பிரிவு போலீசார் கூறியதாவது:

தற்போது ஆன்லைன் மூலம் புதிய வகை மோசடி நடந்து வருகிறது. பகுதி நேர வேலை தருவதாக வாட்ஸ் அப்பில் குறுந்தகவல் அனுப்புவார்கள். என்ன வேலை என்று ரிப்ளை செய்தால் 'யூடியூப் வீடியோவை லைக் செய்வது' என்று பதில் அளிப்பார்கள்.

அதன்படி அவர்களின் யூடியூப் வீடியோவை லைக் செய்தால் ரூ.50 முதல் ரூ.500 வரை உடனடியாக பணம் வரும். பின்னர் அவர்கள் நம்மை டெலிகிராம் குரூப்பில் இணைத்து விடுவார்கள். அதில் பகுதி நேர வேலை, முதலீடு என்று 2 வாய்ப்பு தருவார்கள். பகுதி நேர வேலையை தேர்வு செய்தால் ஒரு வேலையை கொடுப்பார்கள். அதற்கு மிக குறைந்த அளவு பணம் கட்ட வேண்டும். அதில் பல படிநிலைகள் இருக்கும்.

முதல் 2 படிநிலைகள் எளிதாக இருக்கும். அதை செய்து முடித்தவுடன் முதலீடு செய்த பணம் போக 30 முதல் 60 சதவீதம் பணம் நமக்கு கமிஷனாக கிடைக்கும்.

இப்படி ரூ.13 ஆயிரம் வரை பணத்தை திரும்ப நமக்கு தருவார்கள். அதற்கு அடுத்த படிநிலையில் முதலீடு செய்யும் தொகை ரூ.5 ஆயிரம், ரூ.10 ஆயிரம் என படிப்படியாக ரூ.5 லட்சம் வரை உயர்ந்து கொண்டே செல்லும்.

நாம் அவர்கள் கொடுக்கும் பணியை முடித்துவிட்டால் நமக்கு கமிஷன் தொகை கிடைக்கும் என்று நினைத்திருப்போம். அதாவது நாம் ரூ.10 லட்சம் கட்டி இருந்தால் கமிஷன் தொகை 50 சதவீதத்தையும் சேர்த்து ரூ.15 லட்சம் நமக்கு கிடைக்க இருப்பதாக டிஸ்பிளேயில் காட்டும்.

அதனால் ஆர்வத்துடன் ரூ.10 லட்சத்தை செலுத்தினால் அதன்பிறகு பணத்தை எடுக்க முடியாது. உங்கள் கணக்கு முடங்கிவிட்டது. பணத்தை எடுக்க வேண்டும் என்றால் உங்களுக்கு வர வேண்டிய ரூ.15 லட்சத்துக்கு 20 சதவீதம் வருமான வரி செலுத்த வேண்டும். அதை செலுத்தினால் முழு பணமும் கிடைத்துவிடும் என்பார்கள்.

இல்லாவிட்டால் நீங்கள் செய்த பணி தவறாகிவிட்டது. எனவே நீங்கள் இருக்கும் குழுவில் உள்ளவர்களுக்கு உங்கள் பணம் பகிர்ந்து அளிக்கப்பட்டுவிட்டது என்று கூறுவார்கள். இப்படி ஒவ்வொரு காரணமாக கூறி உங்களிடம் வெவ்வேறு வழிகளில் பணத்தை பறித்துக் கொண்டே இருப்பார்கள். அதன்பிறகு எந்த பணமும் நமக்கு வராது.

நமக்கு கொடுக்கப்பட்ட வாய்ப்பில் பகுதி நேர வேலை என்பதற்கு பதிலாக முதலீடு என்று தேர்வு செய்தால் நமது சேமிப்பு பணம் முழுவதையும் முதலீடு செய்ய வைத்து அதிக வட்டி தருவதாக கூறி நமது பணத்தை மோசடி செய்து விடுவார்கள்.

எனவே, இதுபோன்ற ஆன்லைன் மோசடியில் பொது மக்கள் எப்போதும் கவனமாக இருக்க வேண்டும். அதையும் மீறி நீங்கள் ஏமாற்றப்பட்டால் உடனடியாக 1930 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் புகார் தெரிவிக்கலாம். www.cybercrime.gov.in என்ற இணையதள முகவரியிலும் புகார் அளிக்கலாம்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Tags:    

Similar News