தமிழ்நாடு

புதிய வகை கொரோனா பரவல்: யார்-யார் சோதனை செய்து கொள்ள வேண்டும்?

Published On 2023-12-30 06:49 GMT   |   Update On 2023-12-30 06:49 GMT
  • காய்ச்சல், சளி, தொண்டை வலி, மூச்சுத்திணறல் உள்ளிட்ட கொரோனா அறிகுறிகள் உள்ள அனைவருக்கும் ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்.
  • தொற்று உறுதி செய்யப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கும் பரிசோதனை செய்ய வேண்டும்.

சென்னை:

கோவா, மகாராஷ்டிரா, கர்நாடகம், தெலுங்கானா, கேரளத்தை தொடர்ந்து தற்போது தமிழகத்திலும் ஜே.என்.1 வகை கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு உறுதியாகியுள்ளது.

கொரோனா பரவல் குறித்து மாநில அரசுகளுக்கு பல்வேறு அறிவுறுத்தல்களை மத்திய சுகாதாரத்துறை வழங்கியுள்ளது.

குறிப்பாக, அறிகுறிகள் உள்ள அனைவருக்கும் பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளது. அதன்படி, தமிழகத்தில் அறிகுறிகள் உள்ளோருக்கு ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை நடத்துமாறு பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வவிநாயகம் உத்தரவிட்டார்.

அதன்படி, தினமும் 350-க்கும் மேற்பட்ட பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில், தமிழகத்தில் யாருக்கு எல்லாம் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பது குறித்த அறிவுறுத்தலை சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு செல்வவிநாயகம் வழங்கி உள்ளார். இதுதொடர்பாக அவர் அனுப்பி உள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:-

காய்ச்சல், சளி, தொண்டை வலி, மூச்சுத்திணறல் உள்ளிட்ட கொரோனா அறிகுறிகள் உள்ள அனைவருக்கும் ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், இணை நோயாளிகள், உறுப்பு மாற்று சிகிச்சை மேற்கொண்டவர்களுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயம் மேற்கொள்ள வேண்டும்.

தொற்று உறுதி செய்யப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கும் பரிசோதனை செய்ய வேண்டும். மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் தீவிர நுரையீரல் தொற்றுக்கு உள்ளானவர்கள், இன்புளூயன்சா போன்ற பாதிப்புக்குள்ளானவர்களுக்கும் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார்.

Tags:    

Similar News