தமிழ்நாடு செய்திகள்

மத்திய அரசை கண்டித்து தஞ்சையில் காங்கிரசார் ரெயிலை மறிக்க முயற்சி- 100 பேர் கைது

Published On 2023-04-15 12:38 IST   |   Update On 2023-04-15 12:38:00 IST
  • தஞ்சை ரெயில் நிலையம் முன்பு ஏராளமான காங்கிரஸ் கட்சியினர் திரண்டனர்.
  • காங்கிரஸ் கட்சியினர் கோஷங்கள் எழுப்பியபடி ரெயில் நிலையத்துக்குள் நுழைய முயன்றனர்.

தஞ்சாவூர்:

ராகுல்காந்தியை எம்.பி. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்ததை கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக இன்று தமிழ்நாடு முழுவதும் காங்கிரசார் ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இன்று தஞ்சை ரெயில் நிலையம் முன்பு ஏராளமான காங்கிரஸ் கட்சியினர் திரண்டனர்.

ராகுல்காந்தியை எம்.பி. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்த மத்திய அரசை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதற்கு தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் கிருஷ்ணசாமி வாண்டையார் தலைமை தாங்கினார். முன்னாள் மாவட்ட தலைவர் நாஞ்சி கி. வரதராஜன், தெற்கு மாவட்ட துணை தலைவர் வக்கீல் கோ. அன்பரசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்தப் போராட்டத்தில் மாநில துணைத்தலைவர் ராஜா தம்பி, ஐ.என்.டி.யூ.சி. மாவட்ட பொது செயலாளர் பூதலூர் மோகன்ராஜ், முன்னாள் எம்.எல்.ஏ பேராவூரணி சிங்காரம் உள்ளிட்ட ஏராளமானோர் மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பியவாறு ரெயிலை மறிக்க முயன்றனர். ஆனால் துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜா தலைமையில் ஏராளமான போலீசார் ரெயில் நிலையம் முன்பு பேரிகார்டு கொண்டு தடுப்பு அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். ரெயில் நிலையத்துக்குள் யாரும் நுழையாதவாறு பாதுகாப்பில் இருந்தனர்.

காங்கிரஸ் கட்சியினர் கோஷங்கள் எழுப்பியபடி ரெயில் நிலையத்துக்குள் நுழைய முயன்றனர். ஆனால் போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். இதனால் கட்சியினருக்கும், போலீசாருக்கும் இடையே கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

தொடர்ந்து காங்கிரஸ் கட்சியினர் வலுக்கட்டாயமாக ரெயிலை மறிப்பதற்காக ரெயில் நிலையத்துக்குள் நுழைய முயன்றதால் போராட்டத்தில் ஈடுபட்ட 100-க்கும் மேற்பட்ட காங்கிரஸ் கட்சியினரை போலீசார் கைது செய்து வாகனத்தில் ஏற்றி தனியார் மண்டபத்தில் தங்க வைத்தனர்.

Tags:    

Similar News