தமிழ்நாடு செய்திகள்

மல்லிகார்ஜூன கார்கே - சசிதரூர்

இது காங்கிரஸ் ரகசியம்...

Published On 2022-10-15 15:48 IST   |   Update On 2022-10-15 15:48:00 IST
  • அகில இந்திய காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தேர்தல் நடத்தப்படுகிறது.
  • மல்லிகார்ஜூன கார்கே வந்ததும் தடபுடலான வரவேற்பு ஏற்பாடுகளுடன் சத்திய மூர்த்தி பவன் அமர்க்களப்பட்டது.

அகில இந்திய காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தேர்தல் நடத்தப்படுகிறது. இதற்காக போட்டியாளர்களாக களத்தில் நிற்கும் மல்லிகார்ஜூன கார்கேவும், சசிதரூரும் அனைத்து மாநிலங்களுக்கும் சென்று காங்கிரசாரிடையே ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். கடந்த 6-ந் தேதி சசிதரூர் தமிழகத்துக்கு வந்தார். அவர் சத்தியமூர்த்தி பவனுக்கு வந்தபோது மாநில நிர்வாகிகள் யாரும் வரவேற்க வரவில்லை. ஒரு சிலர் மட்டும் வந்திருந்தார்கள். கார்த்தி சிதம்பரத்தின் ஆதரவாளர்கள் அவருக்கு வாக்களிப்பார்கள் என்று தெரிகிறது.

நேற்று மல்லிகார்ஜூன கார்கே வந்ததும் தடபுடலான வரவேற்பு ஏற்பாடுகளுடன் சத்திய மூர்த்தி பவன் அமர்க்களப்பட்டது. வரவேற்பு பதாகைகள், கட் அவுட்டுகள் சத்திய மூர்த்தி பவனில் அணிவகுத்தன. கார்கே பேசுவதற்காக தனி மேடையும் அமைக்கப்பட்டு இருந்தது. 8 மாவட்டத்தை சேர்ந்த நிர்வாகிகள் அனைவரும் வர வேண்டும் என்று அழைப்பு விடுக்கப்பட்டு அனைவரும் வந்திருந்தனர்.

வரவேற்புக்காக ஏராளமானோரை திரட்டி வந்தும் அமர்க்களப்படுத்தினார்கள். எந்த வேட்பாளருக்கும் சோனியா, ராகுல் ஆதரவு இல்லை என்று அறிவித்தார்கள். அப்படி இருந்தும் காங்கிரசார் வரவேற்பதில் ஏன் பாரபட்சம் காட்டினார்கள் என்று தெரியவில்லை.

இதை சசிதரூரே வேதனையுடன் குறிப்பிட்டுள்ளார். காங்கிரசார் என்னை வரவேற்கவில்லை. எல்லா மாநிலங்களிலும் இதுதான் நிலைமை என்று குறிப்பிட்டு உள்ளார். இதுபற்றி காங்கிரஸ் மூத்த நிர்வாகிகள் சிலரிடம் கேட்டபோது அது இதுதான் காங்கிரஸ் ரகசியம். நாங்கள் இதை வெளிப்படையாக சொல்ல முடியாது. மேலிடத்தின் அதிகாரப்பூர்வ வேட்பாளர் கார்கேதான் என்றார்கள். அப்படியென்றால் ஏன் தேர்தல் நடத்த வேண்டும் என்றதும் அவர்களுக்கே உரித்தான பாணியில் இதெல்லாம் சகஜம்தான் என்றனர். காங்கிரசுக்குள் இப்படி தப்புத்தப்பாக எடுக்கப்படும் முடிவுகள்தான் ஒவ்வொரு காலக்கட்டத்திலும் தப்புக்கணக்காகி விடுகிறது.

Tags:    

Similar News