நெல்லை மாநகர ஆயுதப்படையில் போலீஸ்காரரை தாக்கிய ஏட்டு- முதலமைச்சர் தனிப்பிரிவில் புகார்
- ஏட்டு ஒருவர் சக போலீஸ்காரர்களை தனது பேச்சை மட்டும் கேட்க வேண்டும் என்று மிரட்டியதாக புகார் எழுந்தது.
- மனமுடைந்த இரண்டாம் நிலை காவலர் முதலமைச்சரின் தனிப்பிரிவு மற்றும் தமிழக டி.ஜி.பி. ஆகியோருக்கு புகார் மனு அனுப்பியுள்ளார்.
நெல்லை:
நெல்லை மாநகர ஆயுதப்படை பாளை ஐகிரவுண்டு ஆஸ்பத்திரி பின் வாசல் செல்லும் சாலையில் அமைந்துள்ளது.
இங்கு மாநகர் மற்றும் மாவட்ட ஆயுதப்படை காவலர்கள் பணியாற்றி வருகின்றனர். இதில் மாநகர ஆயுதப்படை அலுவலகத்தில் பணிபுரியும் போலீஸ் ஏட்டு ஒருவர் சக போலீஸ்காரர்களை தனது பேச்சை மட்டும் கேட்க வேண்டும் என்று மிரட்டியதாக புகார் எழுந்தது.
இந்நிலையில் சமீபத்தில் அந்த போலீஸ் ஏட்டு, ஆயுதப்படையில் பணியாற்றும் 2-ம் நிலை காவலர் ஒருவரை அழைத்து அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும், பின்னர் அவரை தாக்கியதில் அந்த காவலர் மயங்கி விழுந்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்த சம்பவத்தை மாநகர போலீஸ் கமிஷனருக்கு தெரியப்படுத்தாமல் அங்கிருந்து சக காவலர்கள் உதவியுடன் போலீஸ் ஏட்டு அந்த காவலரின் மயக்கத்தை தெளிய வைத்து வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளார். இதனால் மனமுடைந்த இரண்டாம் நிலை காவலர் முதலமைச்சரின் தனிப்பிரிவு மற்றும் தமிழக டி.ஜி.பி. ஆகியோருக்கு புகார் மனு அனுப்பியுள்ளார்.
இதையடுத்து சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.