தமிழ்நாடு

கவர்னர் தேநீர் விருந்தில் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார்

Published On 2023-01-26 06:09 GMT   |   Update On 2023-01-26 10:01 GMT
  • கவர்னர் நடத்திய பொங்கல் விழா மற்றும் சுதந்திர தினவிழா, தேநீர் விருந்துகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புறக்கணித்து இருந்தார்.
  • கவர்னர் ஆர்.என்.ரவி நேற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் தொலைபேசியில் பேசி தேநீர் விருந்துக்கு வருமாறு அழைப்பு விடுத்திருந்தார்.

சென்னை:

தி.மு.க. அரசுக்கும், கவர்னருக்கும் இடையே இணக்கமான சூழல் இல்லாத நிலையில் இன்று குடியரசு தின விழாவுக்கு வந்த கவர்னரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்முகத்துடன் வரவேற்று உபசரித்தார்.

இந்த சூழலில் குடியரசு தினத்தையொட்டி இன்று மாலை கவர்னர் மாளிகையில் நடைபெறும் தேநீர் விருந்திலும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்க இருக்கிறார். பல்வேறு சட்ட மசோதாக்களுக்கு கவர்னர் கையெழுத்திடாமல் உள்ள சூழலில் அதை சுட்டிக்காட்டி இதற்கு முன்பு கவர்னர் நடத்திய பொங்கல் விழா மற்றும் சுதந்திர தினவிழா, தேநீர் விருந்துகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புறக்கணித்து இருந்தார்.

இந்த சூழலில் கவர்னர் ஆர்.என்.ரவி நேற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் தொலைபேசியில் பேசி தேநீர் விருந்துக்கு வருமாறு அழைப்பு விடுத்திருந்தார். கவர்னரின் செயலாளர் நேரில் சென்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து அதற்கான அழைப்பிதழை வழங்கினார். அதை ஏற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மாலையில் கிண்டி ராஜ்பவனில் கவர்னர் ஆர்.என்.ரவி அளிக்கும் தேநீர் விருந்தில் பங்கேற்கிறார்.

கவர்னர் அளிக்கும் தேநீர் விருந்தை புறக்கணிக்கப் போவதாக தி.மு.க.வில் அங்கம் வகிக்கும் கூட்டணி கட்சிகள் ஏற்கனவே அறிவித்திருந்தன.

சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவர் திருமாவளவன், இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் இரா.முத்தரசன், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் ஆகியோர் கவர்னரின் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக அறிவித்திருந்தனர்.

இந்த நிலையில் கவர்னர் அளிக்கும் தேநீர் விருந்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்க இருப்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News