தமிழ்நாடு

புதிய சுற்றுலா பேருந்து பயன்பாட்டை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

Published On 2023-11-29 06:47 GMT   |   Update On 2023-11-29 08:54 GMT
  • தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக தலைமை அலுவலகத்தில் 24 மணி நேரமும் செயல்படும் சுற்றுலா உதவி மையம் செயல்பட்டு வருகின்றது.
  • மாமல்லபுரத்திற்கு சுற்றுலா பயணம் மேற்கொள்ள சொகுசு சுற்றுலா பேருந்துகளை கொடியசைத்து தொடங்கி வைத்து, மாணவ, மாணவிகளை வழியனுப்பி வைத்தார்.

சென்னை:

தமிழ்நாட்டில் சுற்றுலாவை மேம்படுத்திட முத்தமிழறிஞர் கலைஞர் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தை 1971 ஆம் ஆண்டு உருவாக்கினார். தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம், சுற்றுலா பேருந்து சேவைகள், சுற்றுலா பயணத்திட்டங்கள், ஓட்டல் தமிழ்நாடு என்ற பெயரிலான தங்கும் விடுதிகள், அமுதகம் என்ற பெயரிலான உணவு விடுதிகள், படகு குழாம்கள் போன்ற பல்வேறு சேவைகளை சுற்றுலா பயணிகளுக்கு வழங்கி வருகின்றது.

சுற்றுலா பயண திட்டங்களை மேற்கொள்வதற்காக தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் குளிர்சாதன வசதியுடன் கூடிய வால்வோ சொகுசு பேருந்துகள், உயர்தர சொகுசு பேருந்துகள், சாதாரண சொகுசு பேருந்துகள், 18 இருக்கைகளுடன் கூடிய சிறிய ரக சொகுசு பேருந்துகள் என மொத்தம் 14 சொகுசு பேருந்துகளை இயக்கி வருகிறது.

சுற்றுலா பயணிகளின் வசதிக்காக பல்வேறு சுற்றுலாக்கள் குறித்த தகவல்கள், முன்பதிவு ஆகியவற்றை சுற்றுலா பயணிகளுக்கு வழங்கவும் மற்றும் சுற்றுலாவின்போது ஏற்படும் குறைகளை களையவும் உடனடி நடவடிக்கை மேற்கொள்ள தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக தலைமை அலுவலகத்தில் 24 மணி நேரமும் செயல்படும் சுற்றுலா உதவி மையம் மற்றும் கட்டுப்பாட்டு அறை செயல்பட்டு வருகின்றது. 

இந்நிலையில் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் 2.92 கோடி ரூபாய் மதிப்பிலான 2 புதிய வால்வோ சொகுசு சுற்றுலா பேருந்துகளின் பயன்பாட்டை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.

பூவிருந்தவல்லி - பார்வைத்திறன் குறைவுடையோருக்கான அரசு மேல்நிலைப்பள்ளி, தாம்பரம் சானிடோரியம்- செவித்திறன் குறைவுடையோருக்கான அரசு நடுநிலைப்பள்ளி மற்றும் தாம்பரம் சானிடோரியம் அறிவுசார் குறையுடையோருக்கான அரசு நிறுவனம் ஆகிய மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சிறப்பு பள்ளிகளைச் சேர்ந்த 60 மாணவ, மாணவிகள் மாமல்லபுரத்திற்கு சுற்றுலா பயணம் மேற்கொள்ள, அச்சொகுசு சுற்றுலா பேருந்துகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்து, மாணவ, மாணவிகளை வழியனுப்பி வைத்தார்.

Tags:    

Similar News