தமிழ்நாடு

கருணாநிதி நினைவாக பேனா சின்னம் அமைப்பதற்கான கருத்து கேட்பு கூட்டத்தில் காரசார மோதல்-கைகலப்பு

Published On 2023-01-31 07:59 GMT   |   Update On 2023-01-31 07:59 GMT
  • பொதுமக்கள், அரசியல் பிரமுகர்கள், சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டு தங்கள் கருத்துக்களை தெரிவித்தனர்.
  • கடலில் பேனா நினைவு சின்னம் அமைப்பதால் சுற்றுச் சூழல் பாதிக்கப்படும்.

சென்னை:

சென்னை மெரினா கடலில் கருணாநிதி நினைவாக ரூ.81 கோடி செலவில் பேனா நினைவு சின்னம் அமைக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

42 மீட்டர் உயரத்தில் இந்த நினைவு சின்னம் அமைகிறது. கருணாநிதி நினைவிடத்தில் இருந்து பாலம் வரை 6 மீட்டர் உயரத்தில் நடைபாதை அமைக்கப்படுகிறது. நிலப்பரப்புக்கு மேல் 290 மீட்டரும், கடல் பரப்புக்கு மேல் 360 மீட்டர் நீளமும் கொண்டதாக இந்த பாலம் அமைகிறது.

இந்த பாலத்தின் அகலம் 9 மீட்டர் ஆகும். இதில் 2 மீட்டர் அகலத்தில் கண்ணாடி பாலமும் உள்ளது.

மெரினா கடலில் பேனா நினைவு சின்னம் அமைப்பது தொடர்பாக பொதுமக்களிடம் கருத்து கேட்பு கூட்டம் சென்னை மாவட்ட கலெக்டர் அமிர்தஜோதி தலைமையில் சென்னை கலைவாணர் அரங்கத்தில் இன்று நடந்தது. இதில் பொதுமக்கள், அரசியல் பிரமுகர்கள், சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டு தங்கள் கருத்துக்களை தெரிவித்தனர்.

தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் மாதவரம் சுதர்சனம், ஐட்ரீம் மூர்த்தி, எபினேசர், நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

கூட்டம் தொடங்கியதும் முதலாவதாக திருவல்லிக்கேணியை சேர்ந்த கல்யாணராமன் பேசினார். அவர் பேசுகையில், "பேனா நினைவு சின்னம் அமைப்பது எதிர்கால சந்ததியினருக்கு முன்னுதாரணமாக அமையும். கருணாநிதி சமூக மாற்றங்களை கொண்டு வந்தார்.

கார்கில் நினைவு சின்னம், போர் நினைவு சின்னம் போல வருங்கால தலைமுறையினர் கருணாநிதி பற்றி அறிந்து கொள்ளும் வகையில் பேனா நினைவு சின்னம் அமைக்கப்படுகிறது. இதை வரவேற்கிறேன்" என்றார்.

சட்ட பஞ்சாயத்து இயக்கத்தை சேர்ந்த அருள் முருகன் பேசுகையில், "கடலில் பேனா நினைவு சின்னம் அமைப்பதால் சுற்றுச் சூழல் பாதிக்கப்படும். எனவே இதை வேறு இடத்தில் அமைக்க ஆய்வு செய்ய வேண்டும்" என்றார்.

இந்த கருத்துக்கு பலர் எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதம் செய்தனர். கலெக்டரும், போலீசாரும் அவர்களை சமாதானம் செய்தனர். அப்போது முன் இருக்கையில் இருந்த சிலர் கருத்து தெரிவிப்பது அவரவர் உரிமை என்று வாக்குவாதம் செய்தனர். வாக்கு வாதம் காரணமாக கூட்டம் அரை மணி நேரம் நிறுத்தப்பட்டது.

பின்னர் அனைவரையும் போலீசார் சமாதானப்படுத்திய பிறகு கூட்டம் தொடர்ந்து நடந்தது. அப்போது கலெக்டர் அமிர்தஜோதி, "சுற்றுச் சூழல் தொடர்பாக மட்டுமே கருத்து தெரிவிக்க வேண்டும். அரசியல் பேசகூடாது. கூட்டத்துக்கு ஒத்துழைப்பு தாருங்கள்" என்றார்.

பின்னர் ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த சங்கர் பேசுகையில், "பேனா நினைவு சின்னம் அமைக்கும் பணி விதிமுறைகளை பின்பற்றி நடக்கவில்லை" என்றார். இதற்கும் எதிர்ப்பு எழுந்தது. இதனால் சலசலப்பு ஏற்பட்டது.

பின்னர் வணிகர் சங்கத்தைச் சேர்ந்த வி.பி.மணி பேசுகையில், "பேனா நினைவு சின்னம் அமைப்பதை நான் வரவேற்கிறேன். இதை கண்டிப்பாக அமைக்க வேண்டும். மெரினா கடற்கரைக்கு கலைஞர் பெயர் சூட்ட வேண்டும்" என்றார்.

அதற்கு கூட்டத்தில் இருந்த ஒரு தரப்பினர், "இங்கு அரசியல் பேசக்கூடாது. சுற்றுச்சூழல் பற்றி மட்டும்தான் பேச வேண்டும்" என்றனர்.

நொச்சிக்குப்பத்தை சேர்ந்த பெருமாள் பேசுகையில், "பேனா நினைவு சின்னம் அமைக்க கட்சி வேறுபாடு இன்றி அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்" என்றார்.

நீலாங்கரையை சேர்ந்த பா.ஜனதா மீனவர் அணி தலைவர் முனுசாமி கூறுகையில், "மெரினா கடலில் பேனா நினைவு சின்னம் அமைத்தால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படும்" என்று கூறி சில வார்த்தைகளை தெரிவித்தார்.

இதனால் மீண்டும் பிரச்சினை ஏற்பட்டது. அவருக்கு ஆதரவாகவும், எதிராகவும் சிலர் குரல் கொடுத்தனர். இதனால் அங்கு கைகலப்பு ஏற்பட்டது. உடனே போலீசார் அவர்களை விலக்கிவிட்டனர். அப்போது கலெக்டர் அமிர்தஜோதி அவரிடம், "உங்களின் கோரிக்கைகளை எழுதி கொடுங்கள்" என்று கூறினார். பின்னர் போலீசார் பாதுகாப்புடன், முனுசாமியை கூட்டத்துக்கு வெளியே கொண்டு வந்துவிட்டனர்.

அதன் பிறகு கூட்டம் தொடர்ந்து நடந்தது. பொதுமக்கள் தொடர்ந்து தங்கள் கருத்துக்களை தெரிவித்தனர்.

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், பேனா நினைவு சின்னம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பேசினார். அவர் பேசுகையில், மெரினா கடலில் பேனா நினைவு சின்னம் வைக்ககூடாது. பேனா நினைவு சின்னம் வைக்க நான் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. வேண்டுமானால் அண்ணா அறிவாலயத்தில் பேனா நினைவு சின்னம் வைத்துக் கொள்ளுங்கள்" என்றார். இதற்கும் கூட்டத்தில் எதிர்ப்பு கிளம்பியது. தொடர்ந்து கூட்டம் நடை பெற்றது.

Tags:    

Similar News