தமிழ்நாடு

சோழன் விரைவு ரெயில் ஆகஸ்டு 14-ந்தேதி முதல் நேரம் மாற்றம்

Published On 2023-07-26 06:54 GMT   |   Update On 2023-07-26 06:54 GMT
  • ரெயில் தண்டவாள பராமரிப்பு பணி, பயணிகளுக்கான வசதிகள் உள்பட பல்வேறு காரணங்களுக்காக ரெயில்களின் நேரம் மாற்றி அமைக்கப்படுவது வழக்கம்.
  • நாங்குநேரி வரை உள்ள நிலையங்களில் 5 நிமிடம் முதல் ஒரு மணி நேரம் வரை மாற்றப்பட உள்ளது.

சென்னை:

தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

ரெயில் தண்டவாள பராமரிப்பு பணி, பயணிகளுக்கான வசதிகள் உள்பட பல்வேறு காரணங்களுக்காக ரெயில்களின் நேரம் மாற்றி அமைக்கப்படுவது வழக்கம்.

அந்த வகையில் சென்னையில் இருந்து இயக்கப்படும் சோழன், குருவாயூர் ஆகிய விரைவு ரெயில்களின் நேரம் வருகிற 14-ந் தேதி முதல் மாற்றி அமைக்கப்பட உள்ளது.

சென்னை எழும்பூரில் இருந்து திருச்சிக்கு காலை 7.15 மணிக்கு புறப்பட வேண்டிய சோழன் விரைவு ரெயில் (22675) நேரம் மாற்றப்பட்டு, காலை 7.45 மணிக்கு புறப்படும். இந்த ரெயில் தாம்பரத்தை 8.13 மணிக்கு அடையும். அங்கிருந்து புறப்பட்டு திருச்சிக்கு பிற்பகல் 2.30 மணிக்கு பதிலாக பிற்பகல் 3 மணிக்கு சென்றடையும். திருச்சியில் இருந்து சென்னை எழும்பூருக்கு சோழன் விரைவு ரெயில் (22676) காலை 10.15 மணிக்கு பதிலாக காலை 11 மணிக்கு புறப்படும். சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தை மாலை 5.30 மணிக்கு பதிலாக மாலை 6.15 மணிக்கு வந்தடையும்.

இது தவிர சென்னை எழும்பூர்-குருவாயூருக்கு இயக்கப்படும் விரைவு ரெயில் (16127) காலை 9 மணிக்கு பதிலாக 9.45 மணிக்கு புறப்படும்.

நாங்குநேரி வரை உள்ள நிலையங்களில் 5 நிமிடம் முதல் ஒரு மணி நேரம் வரை மாற்றப்பட உள்ளது.

இந்த 2 ரெயில்களின் நேரம் மாற்றம் வருகிற ஆகஸ்டு 14-ந்தேதி முதல் அமல்படுத்தப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News