தமிழ்நாடு

பா.ஜனதா தலைவர் ஹெச். ராஜா மீதான 11 வழக்குகளை ரத்து செய்ய சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு

Published On 2023-08-29 06:00 GMT   |   Update On 2023-08-29 06:31 GMT
  • அறிநிலைத்துறை அதிகாரிகள், கனிமொழி எம்.பி., பெரியார் சிலை குறித்து சர்ச்சை பேச்சு
  • பல்வேறு இடங்களில் உள்ள காவல் நிலையங்களில் 11 வழக்குகள் பதிவு

பா.ஜனதாவின் மூத்த தலைவர்களில் ஒருவர் ஹெச். ராஜா. இவர் திண்டுக்கல் மாவட்டத்தில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில் அறநிலையத்துறையையும், அறநிலையத்துறையில் வேலைப்பார்க்கும் அதிகாரிகளின் குடும்பத்தினரையும் அவதூறாக பேசியதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதுதொடர்பாக இவர் மீது பல்வேறு காவல் நிலையங்களில் புகார் அளிக்கப்பட்டது. மேலும், பெரியார் சிலையை உடைப்பது குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாகவும், கனிமொழி எம்.பி. குறித்து பேசியதாகவும் புகார் அளிக்கப்பட்டன. இதுதொடர்பாக அவர் மீது 11 வழக்குகள் உள்ளன.

இந்த 11 வழக்குகளையும் ரத்து செய்யும்படி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு மீதான விசாரணை இன்று நடைபெற்றது. அப்போது, அறநிலைத்துறை அதிகாரிகள் தொடர்பான புகாரில் வாய்வழி செய்தியை கேட்டு புகார் அளிக்கப்பட்டுள்ளது. கனிமொழி வழக்கில் அரசியல் விமர்சனமாக பேசப்பட்டது. மேலும், இது தொடர்பான பாதிக்கப்பட்டவர்கள் நேரடியாக புகார் அளிக்கவில்லை. எனவே வழக்குகளை தள்ளுபடி செய்ய வேண்டும் என ஹெச். ராஜா சார்பில் ஆஜரான வழக்கறிஞர் முறையிட்டார்.

அதற்கு அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், ஹெச்.ராஜாவின் விமர்சனம் தனிப்பட்ட மனிதர் குறித்த விமர்சனம் கிடையாது. அனைத்து மனிதர்களையும் சார்ந்த விமர்சனம். பெண்கள் குறித்து இழிவாக பேசியுள்ளார். நீதிமன்றம் தானாகவே முன்வந்து, விசாரணை நடத்த முடியும் என வாதங்களை முன்வைத்தார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிமன்றம், ஹெச்.ராஜா மீதான 11 வழக்குகளையும் ரத்து செய்ய மறுத்துவிட்டது. மேலும், அனைத்து வழக்குகளையும் ஒன்றிணைத்து கீழமை நீதிமன்றம் 3 மாதத்திற்குள் விசாரணை நடத்தி முடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.

Tags:    

Similar News