தமிழ்நாடு செய்திகள்

காவிரி நீர் பிரச்சினை: நாளை மறுநாள் சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மேல்முறையீடு

Published On 2023-08-30 11:19 IST   |   Update On 2023-08-30 11:19:00 IST
  • கர்நாடக அரசு அணைகளில் தண்ணீர் இருப்பை காரணம் காட்டி தண்ணீர் திறக்க வாய்ப்பு இல்லை என அறிவித்தது.
  • கிருஷ்ணராஜசாகர், கபினி உள்ளிட்ட 4 அணைகளும் நிரம்பவில்லை.

சென்னை:

தமிழ்நாடு, கர்நாடகா ஆகிய இரு மாநிலங்களுக்கும் இடையே காவிரி நீர் பிரச்சினை நீண்ட காலமாக நிலவி வரும் நிலையில், சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின்படி, காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஆணையத்தின் உத்தரவின்படி, கர்நாடக அரசு தமிழ்நாட்டிற்கு நீரை திறந்து விட வேண்டும்.

தமிழகத்தில் காவிரி டெல்டா பகுதியில் குறுவை சாகுபடியை காப்பாற்ற காவிரியில் 24 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்துவிட கர்நாடக அரசுக்கு தமிழகம் கோரிக்கை விடுத்தது. அணைகளில் குறைவான அளவில் தண்ணீர் இருப்பதை காரணம் காட்டி கர்நாடக அரசு காவிரியில் தண்ணீர் திறந்துவிட மறுப்பு தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் கூடிய காவிரி ஒழுங்காற்று ஆணையம் அடுத்த 15 நாட்களுக்கு தமிழகத்துக்கு காவிரியில் வினாடிக்கு 5 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்துவிட பரிந்துரை செய்தது. இந்த தண்ணீர் போதாது என்றும், நிலுவையில் உள்ள 54 டி.எம்.சி. தண்ணீரை திறந்துவிட கர்நாடக அரசுக்கு உத்தரவிட வேண்டும் எனவும் தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.

அதே வேளையில் கர்நாடக அரசு அணைகளில் தண்ணீர் இருப்பை காரணம் காட்டி தண்ணீர் திறக்க வாய்ப்பு இல்லை என அறிவித்தது. இந்த நிலையில் காவிரி மேலாண்மை ஆணையத்தின் 23-வது கூட்டம் அதன் தலைவர் எஸ்.கே.ஹல்தர் தலைமையில் டெல்லியில் உள்ள நீர்வளத்துறை அமைச்சக அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் தமிழக நீர்வளத்துறை செயலாளர் சந்தீப் சக்சேனா, காவிரி தொழில்நுட்ப குழு தலைவர் சுப்பிரமணியம், கர்நாடக நீர்வளத்துறை செயலாளர் ராகேஷ் சிங் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

கூட்டத்தில் தமிழக நீர்வளத்துறை செயலாளர் சந்தீப் சக்சேனா பேசுகையில், சுப்ரீம் கோர்ட்டு கூறியபடி காவிரியில் வினாடிக்கு 24 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்துவிடவேண்டும் என்று வலியுறுத்தினார்.

அதற்கு கர்நாடக அரசு அதிகாரிகள், கர்நாடகாவில் இந்த ஆண்டில் போதிய அளவில் மழை பெய்யவில்லை. இதனால் கிருஷ்ணராஜசாகர், கபினி உள்ளிட்ட 4 அணைகளும் நிரம்பவில்லை. அணைகளில் குறைவான அளவில் நீர் இருப்பதால் கர்நாடக விவசாயிகளின் பாசனத்துக்கே நீர் திறந்துவிடப்படவில்லை.

எனவே தமிழகத்துக்கு தற்போதைய நிலையில் 24 ஆயிரம் கன அடி நீர் திறந்துவிட வாய்ப்பு இல்லை. தினசரி 3 ஆயிரம் கன அடி நீரை திறந்துவிடுகிறோம்'' என தெரிவித்தனர்.

இரு தரப்பு அதிகாரிகள் கூறியதையும் கேட்ட காவிரி மேலாண்மை ஆணையத் தலைவர் எஸ்.கே.ஹல்தர், ''கர்நாடக அணைகளின் நீர் இருப்பு, காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் குறைந்த அளவில் பதிவான மழை ஆகியவற்றை கருத்தில் கொள்கிறோம். அதேவேளையில் தமிழகத்தில் குறுவை சாகுபடிக்கு நீர் தேவைப்படுகிறது. எனவே, தமிழகத்துக்கு அடுத்த 15 நாட்களுக்கு தினமும் விநாடிக்கு 5 ஆயிரம் கனஅடி நீர் திறக்க வேண்டும்'' என உத்தரவிட்டார்.

அதன்படி இந்த 15 நாட்களில் கர்நாடகம் தண்ணீரை குறைவில்லாமல் வழங்கினால் தமிழகத்துக்கு நாளொன்றுக்கு 0.4 டி.எம்.சி. வீதம் மொத்தம் சுமார் 6 டி.எம்.சி. தண்ணீர் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே காவிரி மேலாண்மை ஆணையம் காவிரியில் 5 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்க கர்நாடகாவுக்கு உத்தரவிட்டதை ஏற்க தமிழகம் மறுத்து உள்ளது. இது தொடர்பாக தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் நிருபர்களிடம் கூறியதாவது:-

காவிரி மேலாண்மை வாரியம் நாங்கள் சொன்னதை ஏற்றுக்கொள்ளவில்லை. ஆகையால் வேறு வழி கிடையாது. மறுபடியும் சுப்ரீம்கோர்ட்டை அணுகுவதுதான் எங்களுக்குள்ள ஒரே வழி. வருகிற 1-ந்தேதி சுப்ரீம்கோர்ட்டில் மேல்முறையீடு செய்வோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் கர்நாடக அரசு தரப்பிலும் சுப்ரீம்கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட இருக்கிறது. தொடர்ந்து இந்த விவகாரத்தில் சட்ட நிபுணர்களுடன் கலந்து ஆலோசனை நடத்தப்போவதாக கர்நாடகா தெரிவித்து உள்ளது. இதுபற்றி கர்நாடக துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் மைசூருவில் நிருபர்களிடம் கூறியதாவது:-

காவிரி மேலாண்மை வாரியம் உத்தரவு குறித்து சட்ட நிபுணர்களுடன் கலந்து ஆலோசனை நடத்துவோம். முதல்-மந்திரி சித்தராமையாவுடன் இதுபற்றி பேச இருக்கிறேன். வருகிற 1-ந் தேதி சுப்ரீம் கோர்ட்டில் காவிரி நீர் வழக்கு விசாரணைக்கு வருகிறது. எங்களுக்கு கர்நாடகத்தின் நலன் முக்கியம். சுப்ரீம் கோர்ட்டில் வழக்கிற்கு சிக்கல் வராமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று சட்ட நிபுணர்கள் கூறுகிறார்கள்.

தமிழகத்திற்கு தண்ணீர் திறக்கும்படி நான் இன்னும் உத்தரவிடவில்லை. அணைகளின் சாவி மத்திய அரசிடம் தான் உள்ளது. காவிரி நீர் திறப்பது குறித்து சட்ட நிபுணர்களுடன் கலந்து ஆலோசனை நடத்தி முடிவு எடுக்கப்படும். சுப்ரீம் கோர்ட்டில் திட்டு வாங்க நான் விரும்பவில்லை. முன்பு இத்தகைய நெருக்கடியான நேரத்தில் பா.ஜனதா ஆட்சியில் தண்ணீரை திறந்துவிட்டுள்ளனர். உண்மை நிலை பா.ஜனதாவினருக்கும் தெரியும்.

ஆனால் தண்ணீர் திறக்கக்கூடாது என்று பா.ஜனதாவை சேர்ந்த முன்னாள் நீர்ப்பாசனத்துறை மந்திரி கூறியுள்ளார். இதன் மூலம் எங்களை இக்கட்டான சூழ்நிலையில் சிக்க வைக்க வேண்டும் என்று அவர் விரும்புகிறார்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதனிடையே தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் ஏற்கனவே தாக்கல் செய்த வழக்கு நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) விசாரணைக்கு வருகிறது. அப்போது தமிழக அரசு மேல்முறையீடு செய்ய இருப்பதாக அரசுத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

முன்னதாக சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்தபடி காவிரி மேலாண்மை ஆணையம் கர்நாடக அணைகளின் நீர் இருப்பு குறித்த அறிக்கையை இன்று அல்லது நாளை தாக்கல் செய்யும் என்று தெரிகிறது. அந்த அறிக்கையின் அடிப்படையில் சுப்ரீம் கோர்ட்டு இந்த வழக்கில் முடிவெடுக்க உள்ளது.

Tags:    

Similar News