தமிழ்நாடு செய்திகள்

கொடுமுடி அருகே விபத்து- கார் மோதி வாலிபர் பலி

Published On 2022-10-05 09:10 IST   |   Update On 2022-10-05 09:10:00 IST
  • பவித்ராவின் கணவர் பிரவீன்குமார் வளைகாப்புக்கு பொருட்கள் வாங்க கொடுமுடிக்கு மோட்டார் சைக்கிளில் புறப்பட்டு சென்றார்.
  • மனைவிக்கு வளைகாப்பு நடக்க இருந்த நிலையில் கணவர் விபத்தில் பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

கொடுமுடி:

கரூர் மாவட்டம் நொய்யல் அருகே உள்ள வேட்டமங்கலம் என்ற பகுதியை சேர்ந்தவர் பிரவீன்குமார் (27). இவருக்கும் நாமக்கல் மாவட்டம் கபிலர் மலை சோளிபாளையத்தை சேர்ந்த ராஜா என்பவரது மகள் பவித்ரா (21) என்பவருக்கும் கடந்த 1 வருடத்துக்கு முன்பு திருமணம் நடந்தது.

தற்போது பவித்ரா 7 மாத கர்ப்பிணியாக உள்ளார். அவருக்கு நாளை (வெள்ளிக்கிழமை) வளைகாப்பு நடத்த முடிவு செய்து ஏற்பாடுகள் நடந்து வந்தது.

பவித்ராவின் கணவர் பிரவீன்குமார் நேற்று ஆயுத பூஜையையொட்டி வீட்டில் பூஜைகள் செய்து விட்டு மனைவியின் வளைகாப்புக்கு பொருட்கள் வாங்க ஈரோடு மாவட்டம் கொடுமுடிக்கு மோட்டார் சைக்கிளில் புறப்பட்டார்.

பிரவீன்குமார் கொடுமுடி அருகே உள்ள சோளக்காளிபாளையம் என்ற பகுதியில் வந்து கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த ஒரு கார் பிரவீன்குமார் மீது மோதியது. மேலும் கட்டுப்பாட்டை இழந்த கார் அருகில் இருந்த ஒரு சுவற்றின் மீது மோதி நின்றது.

இந்த விபத்தில் பிரவீன்குமார் படுகாயம் அடைந்தார். இதையடுத்து அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு கொடுமுடி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுபற்றி தெரிய வந்ததும் அவரது மனைவி பவித்ரா மற்றும் குடும்பத்தினர் விரைந்து வந்து பிரவீன்குமார் உடலை பார்த்து கதறி அழுதனர். நாளை மனைவிக்கு வளைகாப்பு நடக்க இருந்த நிலையில் கணவர் விபத்தில் பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

இந்த விபத்து குறித்து கொடுமுடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News