புதுப்பெண்ணை கொலை செய்து கிணற்றில் வீசிய காதலன் கைது- இன்ஸ்டாகிராம் காதலால் விபரீதம்
- இறந்த பெண்ணின் முகம் சிதைக்கப்பட்டு இருந்தது. அந்த பெண்ணுக்கு 20 முதல் 22 வயது இருக்கலாம் என்று கூறப்பட்டது.
- கைதான சிறுவன் உள்பட 5 பேரையும் போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
கடையநல்லூர்:
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே வலசை கிராமம் உள்ளது. அதன் அருகில் சேர்ந்தமரம் சாலையில் கண்டமான் குளம் என்னும் குளத்தின் கரை அருகில் பயன்பாடற்ற நிலையில் இருக்கும் கிணற்றில் கடந்த 10-ந்தேதி சாக்கு மூட்டையில் கட்டப்பட்ட நிலையில் பெண் பிணம் மிதந்தது.
தகவல் அறிந்த கடையநல்லூர் போலீசார் அங்கு சென்று பெண் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். இதுதொடர்பாக இன்ஸ்பெக்டர் ராஜா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தார். இறந்த பெண்ணின் முகம் சிதைக்கப்பட்டு இருந்தது. அந்த பெண்ணுக்கு 20 முதல் 22 வயது இருக்கலாம் என்று கூறப்பட்டது.
அந்த பெண் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? அவரை கொலை செய்தது யார்? அவரை எதற்காக கொலை செய்தார்கள்? என்பது குறித்து தனிப்படை அமைத்து துப்பு துலக்கப் பட்டது.
அதே நேரத்தில் அந்த பெண்ணின் கையில் எம்.வி. என்று பச்சை குத்தப்பட்டு இருந்தது. அதை வைத்தும் போலீசார் துப்பு துலக்கினர். ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள காணாமல் போனவர்கள் பட்டியலை வைத்து இளம்பெண் யார் என்று விசாரித்து வந்தனர்.
இந்நிலையில் தனிப்படையின் தீவிர விசாரணையில், அந்த பெண் சிவகங்கை மாவட்டம் தேவக்கோட்டை அருகே உள்ள இருவாணி வயல் பகுதியை சேர்ந்த வினோதினி(வயது 21) என்பதும், கடையநல்லூர் அருகே உள்ள வலசை கிராமத்தை சேர்ந்த மனோ ரஞ்சித்(22) என்பவர் தனது நண்பர்களுடன் சேர்ந்து வினோதினியை கொலை செய்ததும் தெரியவந்தது.
கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு வினோதினிக்கும், மனோ ரஞ்சித்துக்கும் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அதன்பின்னர் அந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறி உள்ளது. தொடர்ந்து அவர்கள் காதலித்து வந்த நிலையில் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு வினோதினிக்கு சிவகங்கையை சேர்ந்த வேறு ஒரு வாலிபருடன் திருமணம் நடைபெற்றது.
இதனால் மனம் உடைந்த மனோ ரஞ்சித் தற்கொலைக்கு முயற்சி செய்தார். இதனால் மனோ ரஞ்சித்தை மறக்க முடியாமல் தவித்த வினோதினி, கடந்த 5-ந்தேதி தனது கணவரை உதறி தள்ளிவிட்டு வலசைக்கு வந்துள்ளார்.
பின்னர் காதலன் மனோ ரஞ்சித்துடன் சேர்ந்து ஊருக்குள் சுற்றி திரிந்துள்ளார். ஆனால் வினோதினிக்கு வேறு சிலருடன் தொடர்பு இருப்பதாக சந்தேகம் அடைந்த மனோ ரஞ்சித் அவரிடம் கேட்டுள்ளார்.
அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த தகராறு முற்றியதில் ஆத்திரம் அடைந்த மனோ ரஞ்சித் தனது நண்பர்களிடம் தெரிவித்துள்ளார். அவர்களுடன் சேர்ந்து வினோதினியை கொலை செய்ய திட்டம் தீட்டினார்.
அதன்படி சம்பவத்தன்று மனோ ரஞ்சித் தனது நண்பர்களான அதே பகுதியை சேர்ந்த பரத், மகா பிரபு, கடையநல்லூரை சேர்ந்த மணிகண்டன், 17 வயது சிறுவன் ஆகியோருடன் சேர்ந்து வினோதினியை அடித்துக்கொலை செய்தார்.
பின்னர் யாருக்கும் தெரியாமல் தப்பிக்க வினோதினி உடலை சாக்கு மூட்டையில் கட்டி கொண்டு சென்று கிணற்றில் வீசிவிட்டு சென்றுள்ளனர். பின்னர் வழக்கம் போல் ஊருக்குள் நடமாடிய அவர்கள் ஊரை விட்டு புறப்பட்டு சென்றனர்.
பொக்லைன் டிரைவர்களான மனோ ரஞ்சித், மணிகண்டன், மகா பிரபு ஆகியோர் கோவைக்கும், 17 வயது சிறுவன் சென்னைக்கும் தப்பிச் சென்ற நிலையில், போலீசார் துப்பு துலக்கி 5 பேரையும் கைது செய்துள்ளனர்.
கைதான சிறுவன் உள்பட 5 பேரையும் போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.