தமிழ்நாடு செய்திகள்

விபத்துக்கு காரணமான மீன் ஏற்றிவந்த மினி வேனை காணலாம்

பாளை அருகே மோட்டார் சைக்கிள், லோடு ஆட்டோ மீது மீன் லாரி மோதி சிறுவன் பலி

Published On 2023-11-02 15:15 IST   |   Update On 2023-11-02 15:15:00 IST
  • விபத்தில் பாலமுருகனுக்கு 2 கால்களும் முறிந்து படுகாயம் அடைந்தார்.
  • விபத்து குறித்து முறப்பநாடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நெல்லை:

நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகே உள்ள சீலாத்திகுளம் கீழத்தெருவை சேர்ந்தவர் அரிச்சந்திரன். இவருக்கு வெட்டும்பெருமாள்(வயது 20), பாலமுருகன்(17), வேல்முருகன், தமிழரசன் ஆகிய 4 மகன்கள் உள்ளனர்.

அரிச்சந்திரன் தனது குடும்பத்துடன் தூத்துக்குடியில் உள்ள ஒரு வாடகை வீட்டில் குடியிருந்து வந்தார். அவரது 4 மகன்களும் நெல்லையில் உள்ள ஒரு பேக்கரியில் வேலை பார்த்து வருகின்றனர். தினமும் தூத்துக்குடியில் இருந்து வேலைக்கு சென்று வருகிறார்கள்.

இந்நிலையில் சமீபத்தில் சொந்த ஊரான சீலாத்திகுளத்தில் புதிதாக வீடு ஒன்றை கட்டியுள்ளனர். அந்த வீட்டில் குடிபுகுவதற்காக பால் காய்ச்சப்பட்ட நிலையில், நேற்று இரவு சீலாத்திகுளத்தை சேர்ந்த தனது உறவினரான முத்தரசு(24) என்ற வாலிபரின் மினி லோடு ஆட்டோவில் தூத்துக்குடியில் தங்கியிருந்த வீட்டில் இருந்த பொருட்களை ஏற்றினர்.

நள்ளிரவில் தூத்துக்குடியில் இருந்து புறப்பட்டு நெல்லை நோக்கி வந்தனர். அப்போது லோடு ஆட்டோவை முத்தரசு ஓட்டி வந்தார். பாலமுருகனும், வெட்டும் பெருமாளும் இடதுபுறத்தில் அமர்ந்திருந்தனர். பின்னால் ஒரு மோட்டார் சைக்கிளிலும் தமிழரசுனும், வேல்முருகனும் வந்தனர். முறப்பநாடு அருகே முருகன்புரம் என்ற இடத்தில் பஸ் நிறுத்தம் அருகே வந்தபோது பொருட்களை மூடியிருந்த தார்ப்பாய் அவிழ்ந்து விட்டது.

இதனால் 5 பேரும் வாகனத்தை சாலையோரம் நிறுத்திவிட்டு தார்ப்பாயை அவிழ்த்து மீண்டும் கட்டிக்கொண்டிருந்தனர். அப்போது தூத்துக்குடியில் இருந்து கேரளாவிற்கு மீன் ஏற்றிக்கொண்டு வந்த மற்றொரு லோடு வாகனம் எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிளில் மோதி, தார்ப்பாய் கட்டிக்கொண்டிருந்த லோடு ஆட்டோவிலும் மோதியது.

இந்த பயங்கர விபத்தில் பாலமுருகனுக்கு 2 கால்களும் முறிந்து படுகாயம் அடைந்தார். வெட்டும்பெருமாளுக்கு தலையில் ரத்தக்காயம் ஏற்பட்டது. அப்போது மோட்டார் சைக்கிள் தீப்பிடித்ததால் வெட்டும்பெருமாள் மீதும் தீக்காயம் ஏற்பட்டது. லோடு ஆட்டோ டிரைவர் முத்தரசு காயம் அடைந்தார்.

தகவல் அறிந்த முறப்பநாடு போலீஸ் இன்ஸ்பெக்டர் தில்லை நாகராஜன் தலைமையிலான போலீசார் அங்கு விரைந்து சென்று படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிய 3 பேரையும் மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் பாலமுருகன் இன்று அதிகாலையில் பரிதாபமாக உயிரிழந்தார். மற்ற 2 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த விபத்து குறித்து முறப்பநாடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News