தமிழ்நாடு

பூண்டி ஏரியில் விரைவில் படகு சவாரி- அதிகாரிகள் தகவல்

Published On 2022-07-22 07:00 GMT   |   Update On 2022-07-22 07:00 GMT
  • மதகுகளின் உறுதித்தன்மை பற்றி அதிநவீன கருவிகளைக் கொண்டு அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
  • மழைக்காலங்களில் பூண்டி ஏரி முழுவதுமாக நிரம்பும்போது உபரி நீர் மதகுகள் வழியாக திறக்கப்பட்டு வருகிறது.

ஊத்துக்கோட்டை:

சென்னைக்கு குடிநீர் வழங்கும் பிரதான ஏரிகளில் ஒன்று பூண்டி ஏரி. இந்த ஏரியின் உயரம் 35 அடி. 3.231 டி. எம். சி. தண்ணீரை சேமித்து வைக்கலாம். இந்த ஏரியில் சேமித்து வைக்கப்படும் தண்ணீரை தேவைப்படும்போது புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு திறந்து விடப்படுவது வழக்கம்.

இந்த நிலையில் ஏரியின் உயரத்தை 2 அடி உயர்த்தி கூடுதலாக 1.5 டி.எம்.சி. தண்ணீரை சேமித்து வைக்க அரசு முடிவு செய்து உள்ளது. இதைத் தொடர்ந்து உலக வங்கி ஆலோசகர் சூபே தலைமையில் பொதுப்பணித்துறை தலைமைப் பொறியாளர் முரளிதரன், திட்டம் மற்றும் வடிவமைப்பு தலைமைப் பொறியாளர் பொன்ராஜ், கண்காணிப்புப் பொறியாளர் முத்தையா, செயற்பொறியாளர் பொதுப்பணி திலகம், உதவி செயற்பொறியாளர் சத்யநாராயணா, உதவிப் பொறியாளர் ரமேஷ் ஆகியோர் தலைமையிலான அதிகாரிகள் குழு பூண்டி ஏரியை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

அவர்கள் அங்குள்ள மதகுகளின் உறுதித்தன்மை பற்றி அதிநவீன கருவிகளைக் கொண்டு ஆய்வு மேற்கொண்டனர். பின்னர் தலைமை பொறியாளர் முரளிதரன் கூறியதாவது:-

பிரபல சுற்றுலா தலமாக விளங்கும் பூண்டி ஏரியில் விரைவில் படகு சவாரி தொடங்கப்படும். மேலும் ஏரியின் உயரத்தை உயர்த்தி கூடுதலாக 1.5 டி.எம்.சி. தண்ணீரை சேமிக்க உள்ளோம். இதற்கான பணிகள் விரைவில் தொடங்கப்படும். மழைக்காலங்களில் பூண்டி ஏரி முழுவதுமாக நிரம்பும்போது உபரி நீர் மதகுகள் வழியாக திறக்கப்பட்டு வருகிறது. இப்படி திறக்கப்படும் தண்ணீர் வீணாக கடலில் போய் சேருகிறது.

இதனைத் தடுத்து நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்த கொசஸ்தலை, கூவம் ஆற்று ஆறுகளில் உலக வங்கி நிதியைக் கொண்டு தடுப்பணைகள் கட்ட உள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News