தமிழ்நாடு

பாபநாசம் அணை நீர்மட்டம் ஒரே நாளில் 5 அடி உயர்ந்தது- சேர்வலாறு அணையில் 8 அடி நீர் அதிகரிப்பு

Published On 2024-05-24 03:53 GMT   |   Update On 2024-05-24 03:53 GMT
  • அணையின் நீர்மட்டம் நேற்று 52.45 அடியாக இருந்த நிலையில் இன்று ஒரே நாளில் சுமார் 5 அடி அதிகரித்து 57.30 அடியானது.
  • ராதாபுரத்தில் 10 மில்லிமீட்டரும், நாங்குநேரியில் 5 மில்லிமீட்டரும், அம்பையில் 2 மில்லிமீட்டரும் மழை பெய்துள்ளது.

நெல்லை:

தமிழகத்தில் இந்த ஆண்டு கோடை மழை பரவலாக பெய்து வருகிறது. குறிப்பாக நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் கோடை மழை வழக்கத்தைவிட அதிகமாக பெய்து வருகிறது.

நெல்லை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் அமைந்துள்ள அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளில் நேற்று இரவு தொடங்கி இன்று காலை வரையிலும் கனமழை பெய்து வருகிறது. பிரதான அணை யான 143 அடி கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணையில் இன்று காலை நிலவரப்படி 5 சென்டிமீட்டர் மழை கொட்டித்தீர்த்துள்ளது. அணையின் நீர்மட்டம் நேற்று 52.45 அடியாக இருந்த நிலையில் இன்று ஒரே நாளில் சுமார் 5 அடி அதிகரித்து 57.30 அடியானது.

சேர்வலாறு அணையில் இன்று காலை வரை 28 மில்லிமீட்டர் மழை பெய்தது. அணையின் நீர்மட்டம் 64.27 அடியாக இருந்த நிலையில் தொடர் மழையால் இன்று ஒரே நாளில் சுமார் 8 அடி அதிகரித்து 72.34 அடியானது. இந்த 2 அணைகளுக்கும் வினாடிக்கு 3 ஆயிரம் கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது.

118 அடி கொண்ட மணிமுத்தாறு அணையின் நீர்பிடிப்பு பகுதியில் 10 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது. அந்த அணையின் நீர்மட்டம் 85 அடியை எட்டியுள்ளது. கொடுமுடியாறு அணையின் நீர்பிடிப்பு பகுதியில் 23 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது. நேற்று அந்த அணையின் நீர்மட்டம் 10 அடியாக இருந்த நிலையில் இன்று ஒரே நாளில் மேலும் 5 அடி உயர்ந்து 15.25 அடியை எட்டியுள்ளது.

நெல்லை மாவட்டம் முழுவதும் பெய்யும் இந்த கோடை மழையினால் பொது மக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். பெரும்பாலான இடங்களில் நெல் சாகுபடி பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. மாவட்டத்தில் கன்னடியன் கால்வாய் பகுதியில் 17 மில்லிமீட்டரும், களக்காட்டில் 12.4 மில்லி மீட்டரும், சேரன்மகாதேவியில் 6.6 மில்லிமீட்டரும் மழை பதிவாகி உள்ளது.

ராதாபுரத்தில் 10 மில்லிமீட்டரும், நாங்குநேரியில் 5 மில்லிமீட்டரும், அம்பையில் 2 மில்லிமீட்டரும் மழை பெய்துள்ளது.

இன்று காலையில் மாநகரில் ஒரு சில இடங்களில் பரவலாக சாரல் மழை பெய்தது. தொடர்ந்து வெயில் அடித்த நிலையில் மீண்டும் விட்டு விட்டு சாரல் அடிக்க தொடங்கியது. பாளையில் 5.4 மில்லிமீட்டர் மழை பெய்துள்ளது.

தென்காசி மாவட்டத்தில் கடனாநதி, ராமநதி, கருப்பாநதி, குண்டாறு மற்றும் அடவிநயினார் அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த தொடர்மழையால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. கடனா அணை நீர்மட்டம் 2 அடி அதிகரித்து 35 அடியாகவும், ராமநதி அணை நீர்மட்டம் 2 அடி அதிகரித்து 46.50 அடியாகவும் உள்ளது.

மாவட்டத்தில் தென்காசி, செங்கோட்டை, ஆய்க்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் கனமழை பெய்தது. இன்றும் காலை முதலே பரவலாக மழை பெய்தது. இதனால் அப்பகுதி முழுவதும் குளிர்ச்சியான சூழ்நிலை நிலவி வருகிறது. சங்கரன்கோவில், சிவகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களிலும் கடந்த சில நாட்களாகவே தொடர்மழை பெய்து வருவதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம், மணியாச்சி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை கொட்டியது. அதிகபட்சமாக மணியாச்சியில் 40 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது.

கயத்தாறு, கடம்பூர், கழுழுமலை, சாத்தான்குளத்தில் விட்டு விட்டு சாரல் மழை பெய்து வருகிறது. குலசேகரன்பட்டினம், ஸ்ரீவைகுண்டம், கோவில்பட்டி, எட்டயபுரம் பகுதிகளிலும் சாரல் தொடர்ந்து வருகிறது.

Tags:    

Similar News