தமிழ்நாடு

மானூர் அம்பலவாண சுவாமி கோவிலில் கருவூர் சித்தருக்கு நெல்லையப்பர்-காந்திமதி அம்பாள் ஆகியோர் காட்சி கொடுத்த வைபவம் நடந்தபோது எடுத்த படம்.

ஆவணி மூலத்திருவிழாவின் சிகர நிகழ்ச்சி: கருவூர் சித்தருக்கு காட்சி கொடுத்த நெல்லையப்பர்-காந்திமதி அம்பாள்

Published On 2023-08-26 08:22 GMT   |   Update On 2023-08-26 08:22 GMT
  • தனது தவப்பயனால், சிவ தலங்களில் தாம் அழைத்தவுடன் இறைவன் நேரில் காட்சி கொடுக்கும் பேறு பெற்று விளங்கியவர் கருவூர் சித்தர்.
  • 9-ம் திருநாளனன்று கருவூர் சித்தர், நெல்லையில் உள்ள ரத வீதிகளில் உலா வந்து, நள்ளிரவு மானூர் அம்பலவாணர் கோவிலை வந்தடைந்தார்.

நெல்லை:

நெல்லை டவுன் நெல்லையப்பர் கோவிலில் நடைபெறும் திருவிழாக்களில் ஆவணி மூலத்திருவிழா சிறப்பு வாய்ந்ததாகும்.

தனது தவப்பயனால், சிவ தலங்களில் தாம் அழைத்தவுடன் இறைவன் நேரில் காட்சி கொடுக்கும் பேறு பெற்று விளங்கியவர் கருவூர் சித்தர். இவர் ஒரு சமயம், நெல்லையப்பர் கோவில் முன்பாக வந்து வேண்டி அழைக்கவே, இறைவன் பதில் தராததால் சினமடைந்த சித்தர் சாபமிட்டு மானூர் செல்ல முற்பட்டார். இதனையறிந்த நெல்லையப்பர், சிவத்தொண்டராக வேடம் தாங்கி சித்தரை தடுத்து, பணிந்து அழைத்தார். அந்த இடமே தற்போதும் தொண்டர் நயினார் கோவில் எனப்படுகிறது.

தொடர்ந்து சித்தர் மானூர் வந்து சேருகிறார். இதனால் நெல்லையப்பரும், காந்திமதி அம்பாளும் முறையே, சந்திரசேகரராகவும், பவானி அம்மனாகவும் மாறி பாண்டியராஜன், அகத்தியர், குங்கிலிய நாயனார், தாமிரபரணி மற்றும் சண்டி கேஸ்வரர் ஆகியோருடன் மானூர் சென்று, அங்குள்ள அம்பலவாணர் கோவிலில் வைத்து ஜோதிமயமாய் காட்சியளித்து சித்தரின் கோபத்தை தணியச் செய்கின்றனர். பின்னர் கருவூர் சித்தரையும் அழைத்துக்கொண்டு நெல்லைக்கு வருகின்றனர்.

இந்நிகழ்வுகள் ஆவணி மாதம் மூலம் நட்சத்திர நாளில் நடைபெற்றதால் ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மூலத்திருவிழாவாக மானூர் அம்பலவாணர் கோவிலில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. அன்றைய தினம் மானூர் வந்து வழிபடுவோருக்கு, முக்தி கிடைக்கும், மூலநோய் பிரச்சினை தீரும் என்பது ஐதீகம்.

இந்த ஆண்டு ஆவணி மூலத் திருவிழாவானது, நெல்லையப்பர் கோவிலில் கடந்த 16-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து தினமும் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு வழிபாடுகளுடன் வீதியுலா நிகழ்ச்சிகளும் நடைபெற்று வருகிறது.

9-ம் திருநாளனன்று கருவூர் சித்தர், நெல்லையில் உள்ள ரத வீதிகளில் உலா வந்து, நள்ளிரவு மானூர் அம்பலவாணர் கோவிலை வந்தடைந்தார். தொடர்ந்து நேற்று நெல்லையப்பர், காந்திமதி அம்பாள் மற்றும் பரிவாரங்களுடன் வீதியுலா வந்து, நள்ளிரவு புறப்பட்டு இன்று அதிகாலை மானூர் சென்றனர். அங்கு இன்று காலை 7 மணி முதல் 8 மணிக்குள் கருவூர் சித்தருக்கு ஜோதிமயமாய் காட்சி அளித்தனர். தொடர்ந்து சாபவிமோசனம் பெறும் நிகழ்வு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

விழா ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் கவிதா பிரியதர்ஷினி, செயல் அலுவலர் அய்யர் சிவமணி, தக்கார் பரமசிவன் மற்றும் கோவில் பணியாளர்கள், பக்தர்கள் இணைந்து செய்திருந்தனர்.

Tags:    

Similar News