தமிழ்நாடு

அதிமுக வழக்கில் வாதங்கள் நிறைவு- தீர்ப்பை தள்ளிவைத்தது ஐகோர்ட்

Published On 2023-03-22 13:03 GMT   |   Update On 2023-03-22 13:03 GMT
  • பொதுக்குழு உறுப்பினர்களின் குரலை ஒடுக்கும் வகையில் வழக்கு தொடரப்பட்டுள்ளதாக ஈபிஎஸ் தரப்பு வாதிட்டது.
  • ஓபிஎஸ் தரப்பு எழுத்துப்பூர்வ வாதங்களை தாக்கல் செய்ய வெள்ளிக்கிழமை காலை வரை அவகாசம் வழங்கப்பட்டது.

சென்னை:

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை விதிக்க கோரியும், பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிராகவும் ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளனர். இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, பொதுச்செயலாளர் பதவிக்கு எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக கட்சியின் விதிகள் திருத்தப்பட்டுள்ளதாகவும், அந்த விதிகளை திருத்தி நிபந்தனைகளை நீக்கி பொதுச்செயலாளர் பதவிக்கான தேர்தலில் போட்டியிட அனுமதித்தால், ஓ.பன்னீர்செல்வம் போட்டியிட தயாராக உள்ளார் என்றும், ஓபிஎஸ் தரப்பு வழக்கறிஞர் வாதிட்டார். நிபந்தனைகளை நீக்கினால் வழக்கை வாபஸ் பெறவும் தயாராக இருப்பதாக தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி தரப்பு வழக்கறிஞர் வாதாடும்போது, பொதுக்குழு உறுப்பினர்களின் குரலை ஒடுக்கும் வகையில் வழக்கு தொடரப்பட்டுள்ளது என்றார்.

தாங்கள் தான் உண்மையான கட்சி என்றால் தேர்தல் ஆணையத்தில், மக்கள் மன்றத்தில் தங்களின் பலத்தை நிரூபிக்க வேண்டும் என்றும், திமுகவை எதிர்கொள்ள தெளிவான, வலுவான ஒற்றைத் தலைமை என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. வலுவான எதிர்க்கட்சியாக அதிமுக செயல்படுவதை வீழ்த்தும் நோக்கில் தான் பொதுச்செயலாளர் தேர்தலை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டுள்து. எனவே, பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை விதிக்கக் கூடாது என ஈபிஎஸ் வழக்கறிஞர் வாதிட்டார்.

அனைத்து தரப்பு வாதங்களும் இன்று மாலையில் நிறைவடைந்த நிலையில், வழக்கின் தீர்ப்பு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது. ஓபிஎஸ் தரப்பு எழுத்துப்பூர்வ வாதங்களை தாக்கல் செய்ய வெள்ளிக்கிழமை காலை வரை அவகாசம் வழங்கப்பட்டது.

Tags:    

Similar News