தமிழ்நாடு செய்திகள்

ஊழல் வழக்குகளில் சிக்கிய அமைச்சர்களை காப்பாற்றுவதிலேயே தி.மு.க. அரசு அக்கறை காட்டுகிறது: அண்ணாமலை

Published On 2023-10-20 14:28 IST   |   Update On 2023-10-20 14:28:00 IST
  • தமிழகத்தில் விரைவில் அரசியல் மாற்றம் வரும்.
  • தமிழக அரசு மின் கட்டணம் உயர்த்தியதை வாபஸ் பெற வேண்டும்.

கருமத்தம்பட்டி:

கோவை மாவட்டம் சூலூர் தொகுதிக்குட்பட்ட கருமத்தம்பட்டி, சோமனூர் பகுதியில் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை நடைபயணம் மேற்கொண்டார்.

கருமத்தம்பட்டி நால் ரோட்டில் ரோட்டில் இருந்து சோமனூர் பஸ் நிலையம் வரை 3 கிலோ மீட்டர் தூரம் வரை பயணம் மேற்கொண்டார்.

பின்னர் சோமனூர் பஸ் நிலையத்தில் தொண்டர்கள் மத்தியில் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை பேசியதாவது:-

தமிழகத்தில் விரைவில் அரசியல் மாற்றம் வரும். இந்தியாவில் எங்கும் இல்லாத ஊழல் ஆட்சி நடைபெற்று வருகிறது. முதலமைச்சரின் அலுவலகம் தொடங்கி தாசில்தார் அலுவலகம் வரை ஊழல் மிகுந்து காணப்படுகிறது.

சோமனூர் பகுதியில் ஏராளமான விசைத்தறி கூடங்கள், சிறுகுறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் அதிகளவில் உள்ளன. இந்தியாவில் எந்த மாநிலங்களிலும் இல்லாத அளவுக்கு தமிழகத்தில் பீக் ஹவர் மின் கட்டணம், 250 கிலோ வாட் மின்சாரத்திற்கு மேல் வடுதல் கட்டணம், நிலை கட்டணம் உயர்வு என மின் கட்டணத்தை உயர்த்தி உள்ளது.

இதனை குறைக்க கோரி சிறுகுறு தொழில் நிறுவன உரிமையாளர்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தினர். ஆனாலும் இந்த தி.மு.க. அரசானது மின் கட்டணத்தை குறைக்க நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே தமிழக அரசு மின் கட்டணம் உயர்த்தியதை வாபஸ் பெற வேண்டும்.

மகளிருக்கு உரிமை தொகை கொடுக்கிறோம் என்ற பெயரில், இங்கு ஒத்தையாக கொடுத்துவிட்டு, மற்றொரு புறம் கத்தை, கத்தையாக தமிழக அரசு கொள்ளையடித்து வருகிறது.

திரைத்துறையை தங்கள் கையில் வைத்துக்கொண்டு, கருப்பு பணம் அனைத்தையும் வெள்ளையாக்கி வரும் வேலைகளில் தி.மு.க. ஈடுபட்டுள்ளது.

பல்லடத்தில் குடிப்பதை தட்டி கேட்டவர்கள் கொலை செய்யப்பட்டனர். இந்த அரசு டாஸ்மாக் கடைகளை மூடாது. இதனை மூடினால் அரசிற்கு இழப்பு ஏற்படும் என்பதை விட, தி.மு.க.வினர் நடத்தும் மதுபான ஆலைகள் மூலம் கிடைக்கும் வருமானம் நின்று விடும் என்பதால் இவர்கள் டாஸ்மாக் கடையை மூடமாட்டார்கள்.

தி.மு.க. கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளில் 5 சதவீதம் கூட இதுவரை நிறைவேற்றவில்லை. ஊழல் வழக்குகளில் சிக்கிய அமைச்சர்களை காப்பாற்றுவதிலேயே தமிழக அரசு மும்முரமாக இருந்து வருகிறது. வருகிற பாராளுமன்ற தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் பா.ஜ.க. வெற்றி பெறும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Tags:    

Similar News