பத்திரப்பதிவு துறையில் நூதன முறையில் ஊழல் நடக்கிறது- அண்ணாமலை குற்றச்சாட்டு
- வெற்றிலைக்கு புவிசார் குறியீடு பெற்றுக்கொடுத்தவர் பிரதமர் மோடி.
- அமைச்சர் மூர்த்தி அலங்காநல்லூர் சர்க்கரை ஆலையை திறக்க நடவடிக்கை எடுக்கவில்லை.
சோழவந்தான்:
தமிழக பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை என் மண் என் மக்கள் என்ற தலைப்பில் நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே தென்கரை ஊராட்சிக்குட்பட்ட நாராயணபுரம் கிராமத்தில் அண்ணாமலை நடைபயணத்தை மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:-
தமிழகத்தில் ஒவ்வொரு ஊருக்கும் ஒரு பொருள் சிறப்பு. அந்த வகையில் சேலத்தை பொருத்தவரை மாம்பழம், மதுரையை பொருத்தவரை மல்லி, காஞ்சியைப் பொருத்தவரை பட்டு. அதன்படி சோழவந்தான் ஊருக்கு சிறப்பு வெற்றிலையாகும்.
அந்த வெற்றிலைக்கு புவிசார் குறியீடு பெற்றுக்கொடுத்தவர் பிரதமர் மோடி. உலகம் முழுவதுமே நீங்கள் வெற்றிலையை ஏற்றுமதி செய்ய இந்த புவிசார் குறியீடு பயன்படும். ஜல்லிக்கட்டுக்கான தடையை நீக்கி முழுவதுமாக நீக்க நடவடிக்கை எடுத்தவர் பிரதமர் மோடி. பா.ஜ.க.வின் 10 ஆண்டுகால ஆட்சியில் எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தப்பட்டுள்ளது.
நாங்க ஆட்சிக்கு வந்தால் 5 ஆண்டுகளில் மட்டுமே 3 லட்சத்து 50 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று தி.மு.க. தேர்தல் வாக்குறுதி கொடுத்தது. ஆனால் இதுவரையிலும் எத்தனை பேருக்கு வேலைவாய்ப்பு கொடுத்தார்கள்? என தெரியவில்லை. அலங்காநல்லூர் சர்க்கரை ஆலை கொரோனா காலத்தில் மூடப்பட்டது. இன்னும் திறக்கவில்லை. தி.மு.க. அரசு அதனை திறக்க நடவடிக்கை எடுக்காதது ஏன்?. அமைச்சர் மூர்த்தி அலங்காநல்லூர் சர்க்கரை ஆலையை திறக்க நடவடிக்கை எடுக்கவில்லை. அவர் சார்ந்துள்ள பத்திரப்பதிவு துறையில் நூதன முறையில் ஊழல் நடக்கிறது.
இவ்வாறு அவர் பேசினார்.