தமிழ்நாடு

மத்திய மந்திரி அமித்ஷா நாளை தேனி வருகை

Published On 2024-04-03 05:20 GMT   |   Update On 2024-04-03 05:20 GMT
  • தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு முன்பாகவே பிரதமர் நரேந்திர மோடி தமிழகத்தில் 5 முறை பிரசாரம் செய்தார்.
  • மதுரை பழங்காநத்தத்தில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் அமித்ஷா உரையாற்றுகிறார்.

தேனி:

தமிழக பாராளுமன்ற தேர்தல் முதல்கட்டமாக வருகிற 19-ந் தேதி நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் 2 வாரங்களே உள்ள நிலையில் அரசியல் கட்சியினர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

தமிழகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தொடர்ந்து பிரசாரம் செய்து வருகிறார். இதே போல அ.தி.மு.க. மற்றும் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சியின் பொதுச் செயலாளரும், எதிர்கட்சித்தலைவருமான எடப்பாடி பழனிசாமி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.

தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு முன்பாகவே பிரதமர் நரேந்திர மோடி தமிழகத்தில் 5 முறை பிரசாரம் செய்தார். மேலும் கோவையில் ரோடு ஷோவிலும் கலந்து கொண்டு பா.ஜ.க. வேட்பாளருக்கு வாக்கு சேகரித்தார்.

மீண்டும் வருகிற 9-ந் தேதி பிரதமர் நரேந்திர மோடி தமிழகம் வர உள்ள நிலையில் உள்துறை அமைச்சர் அமித்ஷா நாளை முதல் 2 நாட்கள் பிரசாரம் மேற்கொள்கிறார். இதற்காக டெல்லியில் இருந்து விமானம் மூலம் மதுரை வரும் அமித்ஷா பின்னர் அங்கிருந்து தேனி அருகே உள்ள வடப்புதுப்பட்டி தனியார் பொறியியல் கல்லூரிக்கு ஹெலிகாப்டரில் வருகிறார். இதற்காக கல்லூரி வளாகத்தில் ஹெலிகாப்டர் தளம் அமைக்கப்பட்டுள்ளது.

அங்கிருந்து பிற்பகல் 4 மணிக்கு பெரியகுளம் சாலையில் காரில் சென்று தேனி-பெரியகுளம் சாலை, பாரத ஸ்டேட் வங்கி திடலில் இருந்து மதுரை சாலை வழியாக பங்களாமேடு திடல் வரை ரோடு ஷோவில் பங்கேற்கிறார். பொதுமக்களை நேரில் சந்தித்து தேனி பாராளுமன்ற தொகுதி அ.ம.மு.க. வேட்பாளர் டி.டி.வி. தினகரனுக்கு வாக்கு சேகரிக்கும் அமித்ஷா பின்னர் மீண்டும் ஹெலிகாப்டர் மூலம் மதுரை செல்கிறார்.

மதுரை பழங்காநத்தத்தில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் அமித்ஷா உரையாற்றுகிறார். மத்திய உள்துறை அமைச்சர் தேனி வருகையை முன்னிட்டு வடப்புதுப்பட்டி, பங்களா மேடு, தேனியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சாலையின் இருபுறமும் தடுப்புகள் அமைக்கப்பட்டு தொண்டர்கள், கட்சி நிர்வாகிகள் அமித்ஷாவை சந்திக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கடந்த பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட வேட்பாளரான ரவீந்திரநாத்தை ஆதரித்து பிரதமர் மோடி பிரசாரம் மேற்கொண்டார்.

தற்போது மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா தேனியில் பிரசாரம் மேற்கொள்ள வருகை தருவது கட்சி நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சியினரிடையே மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News