மீண்டும் 'மோடி' - வெளியான புதிய கருத்துக் கணிப்பு
- எதிர்க்கட்சிகளை விட பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு கூடுதலாக 12 சதவீத வாக்குகள் கிடைக்கும்.
- ராமர் கோவில் கட்டி இருப்பதால் மோடியின் மீது 23 சதவீதம் பேர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
பாராளுமன்ற தேர்தலில் பிரதமர் மோடி தலைமையிலான பாரதிய ஜனதா கட்சி 3-வது முறையாக வெற்றி பெற்று ஹாட்ரிக் சாதனை படைக்கும் என்று அனைத்து தரப்பினராலும் ஏகமனதாக கருதப்படுகிறது.
இந்த தடவை பிரதமர் மோடிக்கு எத்தனை தொகுதிகளில் வெற்றி கிடைக்கும் என்பது அனைவரது மனதிலும் இருக்கும் மிகப்பெரிய கேள்விக்குறியாகும். 370 இடங்களில் வெற்றி பெற வேண்டும் என்பதை மோடி லட்சியமாக கொண்டு பிரசாரம் செய்து வருகிறார்.
இந்த இடத்தை எட்ட வேண்டுமானால் வாக்களிப்பவர்களில் 50 சதவீதம் பேர் ஆதரவை பிரதமர் மோடி பெற்றாக வேண்டும். அந்த அளவுக்கு ஆதரவு இருக்கிறதா? என்பது பற்றி தி இந்து ஆங்கில நாளிதழ் மிக பிரமாண்டமான கருத்துக் கணிப்பு ஒன்றை நடத்தி உள்ளது.
19 மாநிலங்களில் நடத்தப்பட்ட இந்த ஆய்வில் பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டு அனைத்து அம்சங்களும் ஆராயப்பட்டன. அந்த கருத்துக் கணிப்பு முடிவுகளும் வெளியாகி இருக்கிறது.
அதில் பாரதிய ஜனதா கட்சி 3-வது முறையாக ஆட்சி அமைக்கும் என்று கூறப்பட்டுள்ளது. நாடு முழுவதும் மக்களிடம் பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சியில் கணிசமான அளவுக்கு திருப்தி நிலவுவதை அந்த ஆய்வில் தெரிந்து கொள்ள முடிகிறது.
எதிர்க்கட்சிகளை விட பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு கூடுதலாக 12 சதவீத வாக்குகள் கிடைக்கும். பிரதமர் மோடி ஆட்சி சிறப்பாக இருப்பதாக 42 சதவீதம் பேர் தெரிவித்துள்ளனர். நலத்திட்டங்கள் நல்ல முறையில் நிறைவேற்றப்படுவதாக கூறியுள்ளனர்.
அதே சமயத்தில் பா.ஜ.க. அரசுக்கு எதிராக சிலர் அதிருப்தியும் தெரிவித்துள்ளனர். வேலைவாய்ப்பின்மை அதிகரித்து விட்டதாக 32 சதவீதம் பேரும், விலை உயர்ந்து விட்டதாக 20 சதவீதம் பேரும், வருமானம் குறைந்து விட்டதாக 12 சதவீத பேரும் கூறியுள்ளனர்.
பிரதமர் பதவிக்கு யாரை தேர்வு செய்வீர்கள் என்ற கேள்விக்கு 48 சதவீதம் பேர் மோடிக்கு ஆதரவாக பதில் அளித்துள்ளனர். ராகுலுக்கு 27 சதவீதம் பேர் மட்டுமே ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளனர்.
வட மாநிலங்களில் மோடிக்கு அதிக ஆதரவு இருப்பதை கருத்துக் கணிப்பில் காண முடிந்தது. ராமர் கோவில் கட்டி இருப்பதால் மோடியின் மீது 23 சதவீதம் பேர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
பிரதமர் மோடி தலைமையில் அதிக வெற்றிகளுடன் பா.ஜ.க. ஆட்சி அமைய வாய்ப்பு இருப்பது பல்வேறு அம்சங்கள் மூலம் கருத்துக் கணிப்பில் தெரிகிறது.