தமிழ்நாடு

4 மாதங்களில் ஆர்டலி முறையை முற்றிலும் ஒழிக்க வேண்டும்- சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

Published On 2022-08-23 07:04 GMT   |   Update On 2022-08-23 07:14 GMT
  • தேவைப்பட்டால் உயர் அதிகாரிகளுக்கு உதவியாளர், இருப்பிட உதவியாளர் பணியிடங்களை உருவாக்கலாம்
  • ஆர்டலிகள் பயன்படுத்தப்படுவதாக புகார் வந்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவு

சென்னை:

காவல்துறையில் பணியாற்றும் யு.மாணிக்கவேல் என்பவர் காவலர் குடியிருப்பில் ஒதுக்கப்பட்ட வீட்டை காலி செய்யும்படி அனுப்பப்பட்ட நோட்டீசை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம், போலீஸ் உயர் அதிகாரிகள் தங்கள் கீழ் உள்ளவர்களை கட்டுப்படுத்த இயலாவிட்டால், நன்மதிப்பை இழக்கவும் நேரிடும் என கருத்து தெரிவித்ததுடன், உயர் அதிகாரிகளின் வீடுகளில் ஆர்டர்லி, வாகனங்களில் கருப்பு ஸ்டிக்கர், சொந்த வாகனங்களில் அரசு முத்திரை போன்ற விவகாரங்கள் குறித்தும் விசாரித்தார்.

ஆர்டர்லிகளை வைத்திருக்கக் கூடாது என்கிற தமிழக உள்துறை செயலாளரின் உத்தரவை செயல்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து டிஜிபி விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டார். அதையடுத்து, ஆர்டர்லி விவகாரம் தொடர்பாக தமிழக அரசு தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

அதில், ஆர்டர்லி முறையை காவல்துறையினர் தவறாக பயன்படுத்துவதை தடுக்க உரிய நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவிக்கப்பட்டது.

பெரும்பாலான ஆர்டர்லிகளை திரும்ப பெற்றுள்ளதாகவும், மாற்று ஏற்பாடு செய்தவுடன் மீதமுள்ளவர்களும் திரும்பப்பெறப்படுவார்கள் எனவும் அரசு தரப்பில் தெரிவிக்கபட்டது.

காவல்துறை பணி தவிர தனிப்பட்ட பணிகளுக்காக ஆர்டர்லியை பயன்படுத்த மாட்டோம் என அனைத்து ஐ பி எஸ் அதிகாரிகளும் உத்தரவாதம் அளித்துள்ளதாகவும், டிஜிபி அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார். மேலும், டிஜிபி எடுத்துவரும் நடவடிக்கைகள் வரவேற்கத்தக்கது என்றும், பாராட்டுக்குரியது என்றும் , ஆர்டர்லி முறையை ஒழிக்க அரசு உறுதி பூண்டுள்ளது என்றும் நீதிபதி கருத்து தெரிவித்தார்.

இந்த நிலையில், இந்த வழக்கில் இறுதி தீர்ப்பை நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் இன்று பிறப்பித்தார். அதில், அரசு உத்தரவாதம் அளித்தபடி ஆர்டர்லி முறையை 4 மாதத்திற்குள் ஒழிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக புகார் வந்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அரசுக்கு அவர் உத்தரவிட்டுள்ளார்.

'தேவைப்பட்டால் உயர் அதிகாரிகளுக்கு உதவியாளர், இருப்பிட உதவியாளர் பணியிடங்களை உருவாக்க தமிழக அரசுக்கு டிஜிபி பரிந்துரைக்கலாம். எந்த பணிக்காக நியமிக்கப்பட்டார்களோ அந்த பணியை மட்டும் வழங்கி அரசியலமைப்பு சட்டம் வழங்கிய உரிமையை நிலைநாட்டவேணடும். காவலர் குடியிருப்பில் சட்டவிரோதமாக தங்கியிருப்போரை கண்டறிந்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.

Tags:    

Similar News