எனது உடலை தானம் செய்து கடனை அடையுங்கள்- தற்கொலை செய்த இளம்பெண் எழுதி வைத்த கடிதம்
- வீட்டின் மீது வாங்கிய கடனை அடைக்க முடியாமல் சிரமப்பட்டதாக தகவல்
- சேலம் டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
களரம்பட்டி:
சேலம் களரம்பட்டி ஸ்ரீராம் நகர் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 31). தறி வேலை செய்யும் இவருக்கு, கடந்த 4 ஆண்டுக்கு முன்பு பூஜா (24) என்ற பெண்ணுடன் திருமணம் ஆனது. இவர்களுக்கு வினாயக் (2 1/2) என்ற ஆண் குழந்தை உள்ளது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு, பூஜா திடீரென வீட்டில் தூக்குப் போட்டுக் கொண்டார். இதைக் கண்ட உறவினர்கள் உடனடியாக அவரை மீட்டு சீலநாயக்கன்பட்டி அருகே உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு பரிசோதித்த டாக்டர்கள் பூஜா ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்த புகார் பேரில் செவ்வாய்ப்பேட்டை போலீசார் பூஜாவின் உடலை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தினர்.
அப்போது பூஜா வீட்டில் உள்ள அறையில் கடிதம் ஒன்றை போலீசார் கைப்பற்றினர். அந்த கடிதத்தில், தற்கொலை செய்து கொள்ளும் முடிவை தானே எடுத்ததாகவும், தனது வீட்டின் மீது வாங்கிய கடனை அடைக்க முடியாமல் சிரமப்பட்டு வந்ததாகவும் பூஜா குறிப்பிட்டுள்ளார். மேலும் முதுகு தண்டுவட வலியால் அவதிப்பட்டு, அதற்காக நிறைய மருத்துவ செலவுகள் செய்ததால் கடன் சுமை மேலும் அதிகமானதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
தனது உடலை ஏதேனும் ஒரு மருத்துவமனைக்கு தானமாக கொடுத்து அதில் வரும் பணத்தை கொண்டு தனது வீட்டு கடனை அடைக்குமாறும் அந்த கடிதத்தில் பூஜா உருக்கமாக எழுதி உள்ளார். பூஜாவிற்கு திருமணமாகி 4 ஆண்டுகளே ஆவதால், சேலம் டவுன் போலீஸ் உதவி கமிஷனர் வெங்கடேசன், சேலம் சப்-கலெக்டர் விஷ்ணுவர்த்தினி ஆகியோர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.